இணையவழிக் குற்றங்கள் - காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகள்
இணையவழி மோசடி மூலம் பறிபோன போன 9 லட்சத்து 39 ஆயிரத்து 323 ரூபாயை மீட்டு, மோசடியில் ஈடுபட்ட வங்கி கணக்குகளை காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில், இணையவழிக் குற்றங்களுக்கு எதிராக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது;
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் இணைய வழி குற்றங்கள் மூலம் பாதிக்கப்பட்டு தங்களது வங்கி கணக்கிலிருந்து பணத்தை இழந்த 563 நபர்கள் புகார் மனுக்கள் அளித்தனர். அந்த புகார் மனுக்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் இழந்த மொத்த தொகையில் 9,39,323 ரூபாய் பணம் மீட்கப்பட்டு, சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய வழி குற்றங்கள் மூலம் மோசடி செய்யப்பட்ட மொத்த தொகையில் 1,78,35,944 ரூபாய் பணமானது மோசடியில் ஈடுபட்ட நபர்கள் பயன்படுத்திய வங்கி கணக்கின் முலம் முடக்கப்பட்டுள்ளது.
120 செல்போன்கள் மீட்பு
நடப்பாண்டில் இணைய வழி குற்றங்கள் தொடர்பாக பெறப்பட்ட புகார் மனுக்களுக்கு 9 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் செல்போன்கள் தொலைந்து போனது தொடர்பாக பெறப்பட்ட புகார் மனுக்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு. 15,00,000 ரூபாய் மதிப்பிலான 120 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் 1953 மனுக்கள் மீது தீர்வு
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தினசரி முறையில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 2,496 புகார் மனுக்கள் மீது மேற்கொள்ள வேண்டிய சட்டபூர்வ நடவடிக்கை மற்றும் துரித நடவடிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு, அவற்றுள் 1953 புகார் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், பிரதி வாரம் புதன்கிழமை அன்று பொதுமக்கள் மற்றும் காவலர் குறைதீர்ப்பு நாள் நடத்தப்பட்டு, பாவட்டத்தில் பணிபுரியும் காவல் ஆளிநர்களிடமிருந்து பெறப்பட்ட 93 மனுக்கள் உடனடி நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சாலை விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி சாலை விபத்துகளை குறைத்திடும் செயல்பாடுகளாக சாலை விதிகளை பின்பற்றுதல், சாலை விதிகளை மீறுவதால் ஏற்படும் ஆபத்துகள், தலைகவசம் அணிவதன் அவசியம் மற்றும் அதிவேகமாகவும், குடிபோதையிலும் வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பாக பொது இடங்களில் குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என மொத்தம் 1036 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்சிகள், மயிலாடுதுறை மாவட்ட தாலுக்கா மற்றும் போக்குவரத்து காவல் துறையினரால் நடத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் சாலை விபத்துகள் அதிகமாக ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு, மேற்படி இடத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக நெடுஞ்சாலை துறையினருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரைகள் வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாலை விதிமுறைகள் மீறல் 76,620 வழக்குகள் பதிவு
சாலை விதிகளை மீறி வாகனத்தை இயக்கிய நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 76,620 வழக்குகளும், குடிபோதையில் வாகனத்தை இயக்கிய நபர்கள் மீது 1424 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட குற்றப்பிரிவு-ல் பணமோசடி தொடர்பாக பெறப்பட்ட புகார் மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு 5 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளில் 2 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதே போன்று மாவட்ட குற்றப்பிரிவு-11 ல் நிலமோசடி தொடர்பாக பெறப்பட்ட புகார் மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு 1 குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும், பணமோசடி மற்றும் நிலமோசடி தொடர்பாக மாவட்டத்தில் 5 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறையினரால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்குபெற்ற மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டதுமற்றும் மாவட்டத்தின் 56 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டில் பதிவு செய்யப்பட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான 25 வழக்குகளுக்கும் துரித நடவடிக்கை மேற்கொண்டு. அவற்றுள் 21 வழக்குகளில் உதவி தொகையானது உரிய நபர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
விழிப்புணர்வு நிகழ்வுகள்
தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி போதையில்லா தமிழகம்" முன்னெடுக்கும் விதமாக போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்சிகள் மாவட்டம் முழுவதிலும் உள்ள பல்வேறு பொது இடங்களிலும், அனைத்து கல்வி நிலையங்கள் என நடப்பாண்டில் மொத்தம் 4,750 இடங்களில் மயிலாடுதுறை மாவட்ட தாலுக்கா மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவினரால் நடத்தப்பட்டுள்ளன. போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாரத்தான் ஓட்டம் நடத்துதல், மாணவர்களிடையே தனித்திறன் போட்டிகள் நடத்துதல் மற்றும் பொது இடங்களில் தன்னார்வலர்கள் மூலம் கலை நிகழ்சிகள் நடத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்சிகள், குறிப்பாக மகளிர் பயிலும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் நடப்பாண்டில் மொத்தம் 632 இடங்களில் மாவட்ட தாலுக்கா மற்றும் அனைத்து மகளிர் காவல் துறையினர் முலம் நடத்தப்பட்டுள்ளன. இணையவழியில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் சைபர் கிரைம் இலவச சேவை எண் 1930 தொடர்பான தகவலை பொதுமக்களிடம் சென்றடைய செய்யும் விதமாக பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் துண்டு பிரச்சுரங்கள் விநியோகித்தல், பொது இடங்களில் விழிப்புணர்வு விளக்க சீட்டுகள் ஒட்டுதல், புத்தக கண்காட்சிகளின் போது நிலையங்கள் நிறுவுதல் ஆகிய செயல்பாடுகள் மூலம் மாவட்டத்தில் 120 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல் துறையினர் முலம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இதர தலைப்புகளில் மாவட்டம் முழுவதும் 113 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.