திருட்டு குற்றங்கள் 42% குறைவு! சாலை விபத்துக்களும் சரிவு..மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் ஒராண்டு சாதனை..
மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் திருட்டு குற்றங்கள் 42 %, சாலை விபத்து மரணங்கள் 33 சதவீதமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீவிர கண்காணிப்புப் பணிகளின் காரணமாக, கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் திருட்டு குற்றங்கள் 42 சதவீதமும், சாலை விபத்து மரணங்கள் 33 சதவீதமும் குறைந்துள்ளதாக மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
திருட்டு குற்றங்கள் 42% குறைவு: மீட்கப்பட்ட சொத்துகள்
மாவட்ட காவல்துறையின் புள்ளிவிவரங்களின்படி, 2024-ஆம் ஆண்டில் 168 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பு 2025-ஆம் ஆண்டில் அது 98 வழக்குகளாகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 42 சதவீத வீழ்ச்சியாகும். பதிவு செய்யப்பட்ட 98 வழக்குகளில் 8 வழக்குகள் பெருங்கொள்ளை தொடர்பானவை. இந்த அனைத்துப் பெருங்கொள்ளை வழக்குகளிலும் துரிதமான புலன் விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட அனைத்து எதிரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், திருடுபோன மொத்த சொத்து மதிப்பான ரூ.81,82,000/- இல், ரூ.63,85,750/- மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குறிப்பிடத்தக்க வழக்குகளாக பின்வருவன அமைந்தன
* வைத்தீஸ்வரன்கோவில் ATM கொள்ளை: இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்த வழக்கில் 3 எதிரிகள் கைது செய்யப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட மொத்த பணமும் 4 நாட்களில் மீட்கப்பட்டது.
*மயிலாடுதுறை நகைக் கொள்ளை: லாக்கருடன் 23 சவரன் நகைகள் கொள்ளை போன வழக்கில், குற்றவாளிகள் மற்றும் நகைகள் வெறும் 2 நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டன.
*திருவெண்காடு, ஆணைக்காரன்சத்திரம், குத்தாலம் மற்றும் புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் நடந்த வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நவீன கண்காணிப்பு
திருட்டு மற்றும் இதர குற்றங்களைத் தடுக்க மாவட்டம் முழுவதும் 1,337 புதிய கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பின்வரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன:
* அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் இரவு மற்றும் பகல் நேர ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
* வெளிமாவட்ட எல்லைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
* வங்கிகள், நகைக்கடைகள் மற்றும் அடகு கடை உரிமையாளர்களுடன் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
சாலை விபத்து மரணங்கள் 33% குறைவு
மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்புடன் காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து விபத்து அதிகம் நடைபெறும் பகுதிகளைக் கண்டறிந்து கள ஆய்வு மேற்கொண்டனர். இதன் விளைவாக, சாலை விபத்து மரணங்கள் 34 சதவீதமும், மனித உயிரிழப்புகள் 35 சதவீதமும் குறைந்துள்ளன. 2024-ல் 155 ஆக இருந்த சாலை விபத்து மரணங்கள், 2025-ல் 103 ஆகக் குறைந்துள்ளன.
மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புப் பணிகள்
* புறவழிச்சாலைகளில் ஒளிரும் விளக்குகள், போக்குவரத்து சமிக்கைகள் மற்றும் வேகத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
* குறிப்பாக, வைத்தீஸ்வரன்கோவில், ஆணைக்காரன்சத்திரம் மற்றும் பெரம்பூர் காவல் சரக புறவழிச்சாலைகளில் நவீன மின் விளக்குகள் மற்றும் குறியீடுகள் நிறுவப்பட்டுள்ளன.
* மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
* பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
50 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சல்
சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரை ஒடுக்க மாவட்ட காவல்துறை இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பாண்டில் மட்டும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த 27 பேர், திருட்டு வழக்குகளில் 3 பேர், மதுவிலக்கு குற்றங்களில் 14 பேர், போதைப்பொருள் கடத்தலில் ஒருவர் மற்றும் பாலியல் குற்றங்களில் 5 பேர் என மொத்தம் 50 நபர்கள் தடுப்புக் காவல் சட்டத்தின் (Goondas Act) கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 47 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா மற்றும் புகையிலை விற்பனை செய்பவர்கள் மீது தொடர்ந்து இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.





















