ஊருக்கு மத்தியில் வாழும் முதலை.. உயிர் பயத்தில் கிராம மக்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..?
சீர்காழி அருகே கிராமத்தின் நடுவே அமைந்துள்ள பொது குளத்தில் முதலை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கொள்ளிடம் அருகே அமைந்துள்ள தண்ணீர்பந்தல் கிராமத்தில் உள்ள பொதுக்குளம் ஒன்றில் நீண்ட நாட்களாக பெரிய முதலை ஒன்று நடமாடி வருவதால் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். குடியிருப்புப் பகுதிக்கு அருகாமையில் முதலை உலா வருவதால், வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து முதலையைப் பிடித்துச் செல்ல வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் அவசரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி அருகே உலா வரும் முதலை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியைச் சேர்ந்த தண்ணீர்பந்தல் கிராமத்தின் மையப் பகுதியில், அரசு தொடக்கப் பள்ளிக்கு அருகாமையில் பொதுக்குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் குளத்தில் தண்ணீர் நிறைந்து காணப்பட்டாலும், அதன் மேற்பரப்பு முழுவதையும் ஆகாயத் தாமரைச் செடிகள் போர்த்தியது போல் அடர்ந்து வளர்ந்துள்ளன. இந்தச் செடிகளின் மறைவில்தான் பெரிய முதலை ஒன்று நீண்ட காலமாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால்
கடந்த பல நாட்களாக இந்தக் குளம் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. காரணம், குளத்தில் இருந்து வரும் முதலை அடிக்கடி நீரின் மேற்பரப்புக்கு வந்து நீந்தியபடியே செல்கிறது. இதைத் தவிர, அவ்வப்போது கரையேறி வந்து குளத்தின் கரையோரப் பகுதியில் படுத்து உறங்குவதையும் கிராம மக்கள் நேரில் பார்த்துள்ளனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் தண்ணீருக்குள் சென்றுவிடுகிறது. தினந்தோறும் இதுபோல் முதலை நடமாடி வருவதால், குளத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசித்துவரும் மக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஆடு மேய்க்கும் மக்கள் அச்சம்
குளத்தின் சுற்றுப்புறங்களில் வசித்து வருபவர்கள், தங்கள் கால்நடைகளை, குறிப்பாக ஆடுகளை, அருகிலுள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு ஓட்டிச் செல்லும்போது மிகுந்த கவனத்துடனும் அச்சத்துடனுமே சென்று வருகின்றனர். எந்த நேரத்திலும் முதலை கரையேறி வந்து கால்நடைகளைத் தாக்கக் கூடும் என்ற பயம் கிராம மக்களிடையே நிலவுகிறது. இதனால், ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுவோர் தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே சிரமப்படுகின்றனர்.
சிறுவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை
இந்தக் கிராமத்தில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் வளர்ந்து வருகின்றனர். பொதுவாக கிராமங்களில் சிறுவர்கள் குளக்கரைகள் அல்லது பொது இடங்களுக்குச் சென்று விளையாடுவது வழக்கம். ஆனால், தற்போது முதலை நடமாட்டத்தால், சிறுவர்களை வீட்டை விட்டு வெளியே விடவும், பள்ளிக்குச் சென்று வரவும் பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். எந்த நேரத்திலும் கரையில் படுத்துறங்கும் முதலை திடீரெனத் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்ற அச்சமே இதற்குக் காரணமாக இருந்து வருகிறது.
உள்ளூர் மக்கள் சார்பில் இதுகுறித்துத் தெரிவிக்கையில், "பள்ளிக்கூடம் அருகிலேயே இருப்பதால், குழந்தைகள் பாதுகாப்புதான் எங்களுக்குப் பெரிய கவலையாக உள்ளது. இந்த முதலையைப் பிடித்துச் சென்றால் மட்டுமே, எங்கள் கிராம மக்கள் அச்சத்தில் இருந்து விடுபட முடியும். நாங்கள் நிம்மதியுடன் வாழ வனத்துறை உடனடியாக உதவ வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தனர்.
வனத்துறைக்கு அவசரக் கோரிக்கை
தண்ணீர்பந்தல் கிராமத்தின் பொதுக்குளம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். குடியிருப்புப் பகுதி மற்றும் பள்ளிக்கு அருகாமையில் வன விலங்கான முதலை உலா வருவது, கிராம மக்களின் உயிருக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
எனவே, மயிலாடுதுறை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் இந்தக் கிராம மக்களின் அச்சத்தைப் போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆகாயத் தாமரை அடர்ந்துள்ள இந்தக் குளத்தில் இருக்கும் முதலையைச் சிறப்புக் குழுக்களைக் கொண்டு விரைவாகப் பிடித்து, பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும் என்றும், அதன் மூலம் தண்ணீர்பந்தல் கிராம மக்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி கிராம மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.






















