ஏபிபி நாடு செய்தி எதிரொலி NEWS IMPACT: அபாயகரமான மின்கம்பங்கள் அகற்றம் - மின்வாரியம் அதிரடி நடவடிக்கை!
மணிகிராமம் பகுதியில் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த சிதிலமடைந்த மின்கம்பங்கள் குறித்து 'ஏபிபி நாடு செய்தி தளத்தில் வெளியான செய்தியின் எதிரொலியாக, புதிய மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் மணிகிராமம் பகுதியில் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த சிதிலமடைந்த மின்கம்பங்கள் குறித்து 'ஏபிபி நாடு' (ABP Nadu) செய்தி தளத்தில் வெளியான விரிவான செய்தியின் எதிரொலியாக, தற்போது அங்கு புதிய மின்கம்பங்கள் நடும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மரம் நடப்பட்டுள்ளது.
உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட மணிகிராமம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மின் விநியோகத்திற்காக அமைக்கப்பட்டிருந்த சுமார் பல மின்கம்பங்கள் பல ஆண்டுகள் பழமையானவை. அவற்றின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து, உள்ளே இருந்த இரும்பு கம்பிகள் துருப்பிடித்து, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் இருந்தன.
குறிப்பாக, மின்கம்பிகள் மிகத் தாழ்வாகத் தொங்கியதால், "நிமிர்ந்து நின்றாலே உயிர் போய்விடும்" என்ற அச்சமான சூழல் நிலவியது. இது குறித்து அப்பகுதி இளைஞர் சுபாஷ் என்பவர் வெளியிட்ட ஆதங்கமான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.
ஏபிபி நாடு செய்தியின் தாக்கம்
இந்த விவகாரத்தை ஏபிபி நாடு செய்தி தளம் மிக விரிவாகப் பொதுமக்களின் பார்வைக்கும், அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றது. "அதிகாரிகளின் மெத்தனப்போக்கு - ஒரு உயிர் போன பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்களா?" என்ற கிராம மக்களின் கேள்வியையும், சுபாஷ் என்ற இளைஞரின் போராட்டத்தையும் ஆதாரங்களுடன் செய்தியாக வெளியிட்டது. இந்தச் செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்வாரிய உயரதிகாரிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சமூக ஆர்வலர்களும், அரசியல் பிரமுகர்களும் இச்செய்தியைப் பகிர்ந்து அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
புதிய மின்கம்பங்கள் வருகை
ஏபிபி நாடு செய்தியின் தீவிரத்தை உணர்ந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்வாரிய செயற்பொறியாளர் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து, பூம்புகார் மின்வாரிய ஊழியர்கள் லாரிகள் மூலம் புதிய மின்கம்பங்களுடன் மணிகிராமம் கிராமத்திற்கு வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து பழைய மின்கம்பங்கள் அகற்றப்பட்டு புதிய கம்பங்கள் நடப்பட்டது.
பழைய கம்பங்கள் அகற்றம்
துருப்பிடித்து முறிந்து விழும் நிலையில் இருந்த பல பழைய மின்கம்பங்கள் மின் இணைப்பைத் துண்டித்து பாதுகாப்பாக அகற்றப்பட்டன.
* புதிய மின்கம்பங்கள் நடுதல்: தரமான புதிய சிமெண்ட் மின்கம்பங்கள் கொண்டு வரப்பட்டு, ஆழமான குழிகள் தோண்டப்பட்டு அவை நடப்பட்டன.
*மின்கம்பிகள் சீரமைப்பு: தாழ்வாகத் தொங்கிய மின்கம்பிகளை அகற்றிவிட்டு, பாதுகாப்பு விதிமுறைகளின்படி போதிய உயரத்தில் புதிய மின்வயர்களை இழுத்துக் கட்டும் பணிகளை மேற்கொண்டனர்.
மக்கள் மகிழ்ச்சி
பலமுறை மனு அளித்தும் கண்டு கொள்ளாத அதிகாரிகள், செய்தி வெளியானவுடன் மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்ததைக் கண்டு மணிகிராமம் மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞர் சுபாஷ் கூறுகையில், "நாங்கள் நீண்ட நாட்களாகப் போராடி வந்தோம். எங்களது நியாயமான கோரிக்கையைச் சரியாகப் புரிந்து கொண்டு செய்தியாக வெளியிட்ட ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு எங்களது கிராமத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இன்று புதிய மின்கம்பங்கள் நடப்படுவதைப் பார்க்கும் போதுதான் எங்களுக்கு நிம்மதியாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
அதிகாரிகளின் விளக்கம்
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "நிர்வாகக் காரணங்களால் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். செய்தியின் வாயிலாகப் பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்தவுடன், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி கூடுதல் பணியாளர்களைக் கொண்டு இந்தப் பணிகளை மேற்கொண்டோம் எனத் தெரிவித்தனர். ஊடகங்கள் மக்களின் குறைகளை அதிகாரிகளின் காதுகளுக்குக் கொண்டு சென்றால், நிச்சயமாக மாற்றம் நிகழும் என்பதற்கு மணிகிராமம் மின்கம்பங்கள் மாற்றப்பட்ட நிகழ்வு ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.






















