மணல் கொள்ளைக்கு ஆட்சியர் வைத்த செக் - இனி நடைச்சீட்டு ஆன்லைன் மட்டுமே....!
மயிலாடுதுறை மாவட்டத்தில் குவாரிகளில் இருந்து எடுத்து செல்லும் கனிமவளங்களுக்கான நடைச்சீட்டு ஆன்லைன் மட்டுமே பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் குவாரிகளில் இருந்து எடுத்து செல்லும் கனிமவளங்களுக்கான நடைச்சீட்டு, போலியாக கையால் எழுதப்படுவதாக புகார்கள் குவிந்த நிலையில் இனிவரும் காலங்களில் ஆன்லைன் மட்டுமே நடைச்சீட்டு பெற வேண்டும் என மயிலாடுதுறை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மணல் குவாரிகள்
டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை மாவட்டமாக திகழ்ந்து வருகிறது மயிலாடுதுறை மாவட்டம். இங்கு முக்கிய தொழிலாக விவசாயம் விளங்குகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஒன்றாகும். இந்த சூழல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு அனுமதி பெற்றும், அனுமதி இன்றி சட்டத்திற்கு புறம்பாக மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது.
தொடர்ந்து புகார்கள்
இந்த மணல் குவாரிகள் அரசு அனுமதித்த அளவுகளை கடந்து அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பது, போலி ஒர்க் ஆர்டர் மூலம் மணல் அள்ளுவது, மணல் அனுமதி சீட்டு போலியாக எழுதி மணல் கடத்துவது என பல்வேறு வகைகளில் மணல் திருட்டு நடைபெறுவதாகவும், அதனை தடுக்கும் பொருட்டு பல ஆண்டுகளாக போராடி வரும் மயிலாடுதுறை மாவட்ட சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான சங்கமித்திரன் என்பவர் பல முறை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல துறை சார்ந்த புகார் மனு அளித்துள்ளார். ஆனால் இந்த மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மணல் திருட்டை தடுக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் போலி ஒர்க் ஆர்டர் மற்றும் கையால் எழுதி கொடுக்கப்பட்டு வந்த மணல் அள்ளும் சீட்டுகள் போலியாக உருவாக்கி மணல் கொள்ளையில் ஈடுபடும் சம்பவம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய நடைமுறையை வெயிட்ட ஆட்சியர்
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது; மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959-ன் சிறு வகை கனிமங்களுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு குவாரி பணிகள் நடைபெற்று வருகின்றது.
ஏப்ரல் 30-ம் தேதி முதல் முழுவதும் இணையவழி
இந்நேர்வில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வகை கனிமங்களையும் குவாரியில் இருந்து எடுத்துச் செல்வதற்கு வழங்கப்படும் நடைச்சீட்டுகளை இணையவழி வாயிலாக வழங்கும் நடைமுறை வருகின்ற ஏப்ரல் 28-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட உள்ளது. மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுகனிம குத்தகை உரிமம் வழங்கும் நடைமுறையானது வரும் ஏப்ரல் 30-ம் தேதி முதல் முழுவதுமாக இணையவழியில் மட்டுமே செயல்படுத்தப்பட உள்ளது.
இணையதள முகவரி
எனவே, https://mimas.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக குவாரி குத்தகைதாரர்கள் விண்ணப்பித்து நடைச்சீட்டு பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், புதிதாக குவாரி குத்தகை உரிமம் கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மேற்கண்ட இணையதளம் மூலமாக மட்டுமே பெறப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.






















