தமிழ்நாட்டின் Executive Plan; கல்வி நிலையங்களில் கட்டுக்கதைக்கு இடமில்லை; தூள் பறந்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
காலத்திற்கேற்ற மாற்றங்கள் ஏற்படுத்தவில்லை என்றால், நம்முடைய மாணவர்கள் பின்தங்கிடக்கூடும். அதனால், தாமதமில்லாமல் நாம் உடனடியாக ஈடுபட்டு, அந்த நடவடிக்கைகள் அமையவேண்டும்- முதல்வர் ஸ்டாலின்.

பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
’’அறிவியல் தொழில்நுட்பங்களில், உலகம் வேகமாக மாறி வருகிறது என்று கல்வியாளர்களாகிய உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதற்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில் நம்முடைய பல்கலைக்கழகங்கள் செயல்படவேண்டும். நம்முடைய பல்கலைக்கழகங்களில் சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொள்வது, புதிய உலகத்தரம் வாய்ந்த கல்வி முறைகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான ஆலோசனைகளை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
நாம் உருவாக்கப்போகும் மாற்றங்களின் பயன் நம்முடைய மாணவச்செல்வங்களுக்கு கிடைக்க வேண்டும். தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கான எதிர்காலத் திட்டத்தை உருவாக்க நாம் ஒன்று கூடியிருக்கும் இந்தக் கூட்டம், ஒரு தொடக்கம்தான்.
அடுத்தகட்ட ஆலோசனைகளை நாட்டின் சிறந்த கல்வியாளர்கள் மற்றும் உயர்கல்வியில் உள்ள சிறந்த ஆலோசகர்களிடம் மேற்கொள்ளப் போகிறேன்.
உயர்கல்வித் துறையில், ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்து, புதிய துடிப்பான தமிழ்நாட்டின் அடித்தளமாக மாற்ற, நாம் விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. காலத்திற்கேற்ற மாற்றங்கள் ஏற்படுத்தவில்லை என்றால், நம்முடைய மாணவர்கள் பின்தங்கிடக்கூடும். அதனால், தாமதமில்லாமல் நாம் உடனடியாக ஈடுபட்டு, அந்த நடவடிக்கைகள் அமையவேண்டும்.
நாம் வடிவமைக்க விரும்பும் எதிர்காலத் திட்டம் மூன்று தூண்களை அடிப்படையாக கொண்டது:
- பொருத்தமான கல்வி
- வேலைவாய்ப்பு
- அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை
இந்த மூன்றைப் பற்றியும் நாம் சிந்திக்கவேண்டும்.
முதலாவதாக, பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும். உலகம் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் மாறிக்கொண்டு வருகிறது. Green Energy, Industry 4.0 இவையெல்லாம்தான் பொருளாதாரங்களை முடிவு செய்கிறது. நம்முடைய பல்கலைக்கழகங்களும் வளரும் தேவைகளுக்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும்.
டேட்டா சயின்ஸ், ரினிவபுள் எனர்ஜி, மேம்பட்ட உற்பத்தி போன்ற புதிய துறைகளை பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும்.
அடிப்படைக் கல்வியறிவை நவீன திறன்களோடு இணைத்து, நம்முடைய மாணவர்கள் வெறும் பட்டதாரிகளாக மட்டுமல்லாமல், இன்னோவேட்டிவாக, சொல்யூஷன்ஸ் தருபவர்களாக உருவாக வேண்டும். தொழில்துறையினருடன் இணைந்து, உலகின் தேவைகளை பிரதிபலிக்கும் பாடப்பிரிவுகளை வடிவமைத்து, பல்துறை கற்றலை ஊக்குவிக்க வேண்டும்.
இரண்டாவதாக, கல்வி என்பது அறிவைப் பற்றியது மட்டுமல்லழ அது மாணவர்களுடைய திறன்களையும் மேம்படுத்த வேண்டும். என்னுடைய கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டமானது, இதுவரை 27 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. அதில் 1 இலட்சத்து 19 ஆயிரம் பேர் திறன் மேம்பாடு மற்றும்
வாழ்க்கை வழிகாட்டுதல் மூலம் வேலைவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். தொழில்துறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளை அளிக்கும் இந்தத் திட்டம், நமது இளைஞர்களை “குளோபல் ஜாப் மார்க்கெட்'-இல் போட்டியிடும் திறன் கொண்டவர்களாக மாற்றியிருக்கிறது. இதை இன்னும் செம்மைப்படுத்தலாம். அதற்கான ஆலோசனைகளை நீங்கள் தெரிவிக்கலாம்.
கேம்பஸ் பிளேஸ்மெண்ட்டை வலுப்படுத்தவும், முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்கவும், பயிற்சி திட்டங்களை விரிவாக்கவும் உங்களை கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு மாணவரும் டிகிரி சர்ட்டிபிகேட்டோடு, தன்னம்பிக்கையோடு வாழ்க்கைப் பாதையில் அடியெடுத்து வைப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.
மூன்றாவதாக, இன்க்ளூசிவிட்டி மற்றும் ஈக்விட்டி. தமிழ்நாட்டின் பலம், சமூக நீதியில் நாம் காட்டும் உறுதியிலதான் இருக்கிறது. இது சமூகநீதி, சமநீதியை அடிப்படையாக கொண்ட மாநிலம். எந்த திட்டமாக இருந்தாலும் அதன் அடிநாதமாக இந்தக் கோட்பாடுகள் இருப்பதை பார்க்க முடியும்.
நம்முடைய திராவிட மாடல் அரசின் தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களால், அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேருவது கடந்த மூன்று ஆண்டுகளில் 30 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. ஏனென்றால், இந்தத் திட்டங்கள் பொருளாதாரச் சூழல் நம்முடைய மாணவர்களின் திறமைக்குத் தடை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்கிறது.
இதுபோன்ற திட்டங்களால் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கல்வியை அணுகக் கூடியதாக நாம் மாற்றி இருக்கிறோம். இந்த வரிசையில் மாற்றுத்திறனாளிகளுக்கும், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் ஆதரவான இன்க்ளூசிவ் கேம்பஸ்களை உருவாக்குமாறு பல்கலைக்கழகங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
துணைவேந்தர்கள் - பதிவாளர்களான நீங்கள் அடிப்படையில் கல்வியாளர்களாக இருந்தாலும் - தமிழ்நாட்டின் பலவேறு கனவுகளை நிறைவேற்றித் தரும் செயல்பட்டாளர்களாகவும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் தங்களது பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், சாதனைகள், வேலைவாய்ப்பு மற்றும் அரசு நலத்திட்டங்களின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
கூட்டத்தின் இறுதியில் முதலமைச்சர் ஆற்றிய உரை பின்வருமாறு:
துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களாகிய உங்களது கவனத்திற்கு முக்கியமான விஷயங்கள் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.
உலகெங்கிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் பல்வேறு துறைகளில் தலைமைப் பொறுப்புகளிலும், ஆராய்ச்சிப் பொறுப்புகளிலும் சிறந்து விளங்கி வருகிறார்கள். அவர்களில் பலரும் நமது தாய்த் தமிழ்நாட்டிற்கு, நமது இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாகவும், மாநிலத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் தயாராக இருக்கின்றார்கள். அவர்களது திறமையையும், அறிவையும் பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டில் Executive Plan எனும் திட்டம் வகுக்கப்பட வேண்டும். அதன்மூலம் அயல்நாட்டில் உள்ள நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிஞர் பெருமக்களின் பங்களிப்புடன் நமது கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
அதுமட்டுமல்ல தற்போது அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் மேற்கொண்டு வரக்கூடிய பொருளாதார மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கைகளினால் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் காரணமாக அந்நாட்டில் இருக்கும் நம் மாநிலத்தைச் சார்ந்த திறமை வாய்ந்த பொறியாளர்கள், அறிவியல் அறிஞர்கள் தாய் நாடு திரும்பும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அத்தருணத்தில் அவர்களது திறமையைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களுடன் இணைந்து ஆராய்ச்சிப் பணிகளிலும், உயர் கல்வி அமைப்புகளிலும் உலகத் தரத்தினைக் கொண்டுவர ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வழிவகைகள் செய்திடவும் நீங்கள் உரிய நடவடிக்கைகளை, முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்திட விரும்புகிறேன்.
கல்வி நிலையங்களில் கல்வி மட்டுமே போதிக்கப்பட வேண்டும்
கல்வி நிலையங்களில் அறிவியல்பூர்வமான கருத்துகளும், கல்வியும் மட்டுமே போதிக்கப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அங்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையோ, கட்டுக் கதைகளையோ தவறியும் மாணவர்களிடையே பரப்பிடக் கூடாது. கல்வியின் அடிப்படையே அறிவைச் செம்மைப்படுத்துவதுதான்.
அறிவியல்ரீதியான உண்மைகளையும், உயர்ந்த மானுடப் பண்புகளையும் போதிப்பதுடன், மாணவர்களிடையே சமத்துவத்தையும், சமநீதியையும் கற்பிப்பதுதான் உங்களுடைய தலையாய கடமையாக இருக்க வேண்டும். பிரிவினையைத் தூண்டும் கருத்துகளுக்கோ, நடவடிக்கைகளுக்கோ கல்வி நிலையங்களில் இடமில்லை. இதில் எவ்விதமான சமரசத்தையும் ஏற்றுக்கொள்ள இயலாது.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.






















