அறுவடை செய்த நெல்லை ஏன் உடனடியாக கொள்முதல் செய்யவில்லை?- எச்.ராஜா எழுப்பிய கேள்வி
வைத்தீஸ்வரன் கோயில் பத்திரிகையாளர்களை சந்தித்த எச்.ராஜா திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழக அரசு நிர்வாகத் திறமையின்மை, அலட்சியம் மற்றும் ஊழல் காரணமாக மாநிலத்தின் வளர்ச்சியும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு வழங்கும் பேரிடர் மேலாண்மை நிதியைக் கூடத் தமிழக அரசால் முறையாகப் பயன்படுத்த முடியவில்லை என்றும், மாநிலம் 'கடன் வாங்குவதில் மட்டுமே' முதலிடம் வகிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களைச் சந்தித்த எச். ராஜா, தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு முக்கியக் கேள்விகளை எழுப்பினார்.
மத்திய நிதியை வீணடித்த திராவிட மாடல் அரசு
சமீபத்தில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாகத் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தபோதும், மாநிலத் தலைநகரான சென்னை பெருமளவில் வெள்ளத்தில் மிதந்தது என அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
"எல்லாவற்றிலும் தோல்வியடைந்த இந்தத் திராவிட மாடல் அரசு, மத்திய அரசு வழங்கிய ரூ. 4,000 கோடி பேரிடர் மேலாண்மை நிதியைச் சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காகப் பெற்றது. ஆனால், அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, 95% நிதியைச் செலவழித்து விட்டதாகப் பொய் சொன்னார். மத்திய அரசு நெருக்கடி கொடுத்த பின்னரே, வெறும் 40% பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன என்பதை ஒப்புக்கொண்டனர். மத்திய அரசு நிதி கொடுத்தும், நிர்வாக அலட்சியத்தால் இன்று சென்னை மிதந்து கொண்டிருக்கிறது," என்று அவர் கடுமையாகச் சாடினார்.
நெல் கொள்முதலில் தோல்வியடைந்த அரசு: முளைத்த நெல் மூட்டைகளுக்கு யார் பொறுப்பு?
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் நெல் கொள்முதல் தாமதம் குறித்துப் பேசிய எச். ராஜா, வேளாண்மைத் துறை அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்தார்.
"வேளாண்மைத் துறை அமைச்சர் சாகுபடிப் பரப்பு அதிகரித்ததுதான் பிரச்சினைக்குக் காரணம் என்று தெரிவிக்கிறார். நெல் ஒரு நாளில் விளைந்து விடாது. விதை விதைக்கும்போதே பரப்பளவு அதிகரிப்பு குறித்துத் தெரிந்திருக்க வேண்டும். அறுவடை செய்ய 110 நாட்கள் ஆகும். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு என்ன செய்து கொண்டிருந்தது? அறுவடை செய்த நெல்லை ஏன் உடனடியாகக் கொள்முதல் செய்யவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "ஸ்டாலின் அரசு ஒரு தோல்வியடைந்த அரசு. மோசமான, மக்கள் விரோத அரசாங்கம். இந்த நான்கரை ஆண்டு காலத்தில், கொள்முதல் செய்த நெல்லைப் பாதுகாப்பதற்கு ஒரு நிரந்தரக் கிடங்கு கூட உங்களால் அமைக்க முடியவில்லை. இன்று அறுவடை செய்த நெல்லை வைக்க விவசாயிக்கு இடமில்லை. நீங்கள் கொள்முதல் செய்த நெல்லோ முளைத்துப் போய்விட்டது. நெல்லுக்கான தொகையை இந்திய உணவு கழகம் வழங்குகிறது. அந்த நெல்லைப் பாதுகாத்து வைப்பதுதானே உங்கள் வேலை? கௌரவம் இருந்தால் ஸ்டாலின் உடனடியாகப் பதவியை இராஜினாமா செய்வார், இல்லாவிட்டாலும் வரும் 2026 தேர்தலில் மக்களே உங்களை அடித்து விரட்டுவார்கள்," என்றார்.
மத்திய நிதியைத் திருப்பி அனுப்பிய அலட்சியம்
தமிழக அரசு வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை என்று குற்றம்சாட்டிய எச். ராஜா, அண்டை மாநிலங்களுடன் தமிழகத்தை ஒப்பிட்டார்.
"அருகில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தில், விசாகப்பட்டினத்தில் ரூ. 1.33 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பக் கூடம் அமைகிறது. கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துகின்றன. ஆனால் இங்குள்ள அரசாங்கம் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில்லை. குறிப்பாக, பட்டியல் சமூக மக்களுக்காக வழங்கப்பட்ட ரூ. 10,000 கோடியைக்கூடச் செலவு செய்யாமல் திருப்பி அனுப்பி உள்ளனர். ஒரு செயல்படாத அரசு உள்ளதால் தான் இன்று நெல் முளைத்துள்ளது. எல்லா விதத்திலும் மக்களை ஏமாற்றிய, தோற்றுப்போன அரசாங்கம் ஸ்டாலின் அரசாங்கம் இது என்றார்.
கடன் சுமையில் முதலிடம்; வெள்ளை அறிக்கை தேவை
மாநிலத்தின் நிதி நிலைமை குறித்துப் பேசிய எச். ராஜா, தமிழக அரசு கடன் வாங்குவதில் மட்டுமே முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.
"வருவாய் ஈட்டுவதில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. ஆனால், தமிழகம் கடன் வாங்குவதில்தான் முதலிடத்தில் உள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்த அரசு வாங்கத் திட்டமிட்டுள்ள கடன் தொகை ரூ. 97,000 கோடி. இதில் அரசின் மூலதனச் செலவு ரூ. 57,000 கோடி. எஞ்சிய ரூ. 40,000 கோடியை என்ன செய்யப் போகிறீர்கள்? அது யார் வீட்டுக்குச் செல்லப் போகிறது? எ.வா. வேலு வீட்டுக்கா அல்லது செந்தில் பாலாஜி வீட்டுக்குச் செல்கிறதா? இதற்குக் தெளிவான வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.
பொய், கொலை, கொள்ளை - தி.மு.க.வின் அடையாளம்
நெல் கொள்முதலில் தாமதம் ஏற்படுவதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று வேளாண் துறை அமைச்சர் தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்த எச். ராஜா, "மத்திய அரசு என்ன இவர்களது கையைப் பிடித்து இழுத்து வைத்திருக்கிறதா? கொள்முதல் செய்த நெல் மூட்டைகளைப் பாதுகாக்கப் போதிய வசதிகள் இவர்களிடம் இல்லை. அதை மறைப்பதற்குப் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. என்றாலே கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பொய் என்பதுதான்," என்று ஆவேசமாகப் பதிலளித்தார்.
மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், "ஸ்டாலின் அரசு பொறுப்பேற்றதிலிருந்து 6,700 கொலைகள் நடைபெற்றுள்ளன. ஆளத் தெரியாத, துப்புக் கெட்ட, மக்கள் விரோத அரசு தி.மு.க. அரசு," என்றார்.
முடிவில், கரூர் சம்பவத்திற்குக் காவல்துறை வழங்கிய அனுமதியின் அடிப்படையில் தான் விஜய் கூட்டத்தை நடத்தியுள்ளார் என்றும், உரிய முன்னேற்பாடுகளைச் செய்யத் தவறியது தமிழக அரசுதான் என்றும் குற்றம் சாட்டினார். உடனடியாக அறுவடை செய்த விவசாயிகளிடம் இருந்து நெல்லை முழுவதுமாகக் கொள்முதல் செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் கூறியது போல் இந்த அரசு உருட்டுக்கடை அல்வா அரசு தான் என்றும் தெரிவித்தார்.





















