கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்.... பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் அறிவிப்பு...!
கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழுக்கு செம்மொழித்தகுதி பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் நாளை, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அறிவித்ததை அடுத்து மயிலாடுதுறையில் மாவட்டத்தில் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெறவுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்;
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரின் அறிவிப்பு
தமிழ் வளர்ச்சித்துறை 2024-2025 ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில், தமிழுக்கு செம்மொழித்தகுதி பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் நாளை, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிகழ்ச்சி தமிழ் மொழியின் பெருமையைப் பிரதிபலிப்பதோடு, மாணவர்களிடம் மொழிபற்று மற்றும் பண்பாட்டுப் புரிதலை வளர்க்கும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வரும் ஜூன் 3, 2025, முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகள், மாணவர்கள் தங்கள் ஆளுமை திறனையும், தமிழ் மொழி மேல் கொண்டுள்ள பற்று மற்றும் அறிவையும் வெளிக்கொணர ஒரு அரிய வாய்ப்பாக அமையவுள்ளன.
போட்டிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் தேதி
1. பள்ளி மாணவர்களுக்கு
( 11 மற்றும் 12ஆம் வகுப்பு)
தேதி: 09.05.2025
இடம்: மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி
நேரம்: காலை 9.00 மணி
2. கல்லூரி மாணவர்களுக்கு:
தேதி: 10.05.2025
இடம்: மயிலாடுதுறை ஞானாம்பிகை கல்லூரி
நேரம்: காலை 9.00 மணி
இந்த போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களின் பெயர்கள் மயிலாடுதுறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படும். அதுபோல, கல்லூரி மாணவர்கள் தஞ்சாவூர் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படுவார்கள்.
போட்டியின் அம்சங்கள்
போட்டிகள் இரண்டு பிரிவுகளில் நடைபெறும்:
கட்டுரை போட்டி
பேச்சுப் போட்டி
மாணவர்கள் தமிழ் மொழியைப் பற்றிய தங்கள் தனிப்பட்ட எண்ணங்களை, பார்வைகளை, சமூக நலனோடு இணைத்துப் பகிர்ந்துகொள்ளும் விதமாக இப்போட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது, தமிழ் மொழியின் செம்மொழித் தகுதி, முத்தமிழ் பண்பாடு, கலைஞரின் தமிழ்த்தொண்டு ஆகியவை தொடர்பாகவும் நடைபெறும்.
பரிசுகள் மற்றும் பாராட்டுகள்
இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பரிசுகள்
முதல் பரிசு: ரூ.10,000
இரண்டாம் பரிசு: ரூ.7,000
மூன்றாம் பரிசு: ரூ.5,000
பரிசுடன் சேர்த்து பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
கல்வி வளர்ச்சிக்கு ஒரு முன்னோடி
இந்த விழா மற்றும் போட்டிகள், தமிழ்மொழியின் பெருமையை மாணவர்களுக்கு புரியச் செய்வதோடு மட்டுமல்லாமல், அவர்கள் அடுத்த தலைமுறையாக மொழியை உணர்ந்து பேணுவதற்கான விதையாக அமையும். மாணவர்கள் தங்களது சிந்தனையை முறையாக வடிவமைத்து, நயமிக்க தமிழ் நடையில் எளிமையாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்தும் திறனை வளர்க்கும் வாய்ப்பாக இது அமையும் எனவும்,
முத்தமிழறிஞர் கலைஞரின் புகழையும், தமிழ்மொழியின் செம்மொழித் தன்மையையும் போற்றும் வகையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்த போட்டிகள், சமூக, கலாச்சார மற்றும் கல்வி முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் நிகழ்வாக அமையும். மாணவர்கள் எண்ணக் களங்களிலும், மொழி நடையில் திறமையையும் வளர்த்து கொள்ளும் அரிய வாய்ப்பு இந்த நிகழ்வு. அனைவரும் இதை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, தமிழ் வளர்ச்சி பாதையில் பங்கெடுக்க வேண்டும் என தமிழ்மொழி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.






















