“வீட்டிற்கு கூரை போடுவதற்கு கூட காசு இல்லை” - கண் கலங்கிய மாணவி - நீட் தேர்வில் சாதித்தது எப்படி?
ஓலை குடிசையில் வாழ்ந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 3 வது முறையாக நீட் தேர்வு எழுதி 497 மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் மயிலாடுதுறை மாணவி.
7.5 சதவீதம் அரசு உள்ஒதுக்கீடு மூலம் நீலகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவியாக படிக்கும் வாய்ப்பை பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவி மற்றும் குடும்பத்தார் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற கூலி தொழிலாளி மகள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் சந்திரசேகர் - விஜயா தம்பதியினர். சிறு குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சந்திரோதயா என்ற மகளும், அன்பரசன் என்ற மகனும் உள்ளனர். மகன் அன்பரசன் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளி படிப்பில் முதலிடம்
மகள் சந்திரோதயா மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தனது கனவை நீட் தேர்வில் வெற்றிபெற்று 7.5 சதவீதம் அரசு இட ஒதுக்கீட்டின் மூலம் நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். சிறுவயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்த மாணவி, ஆக்கூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 476 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். அதேபோல் திருக்கடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் 538 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார்.
மூன்று முறை நீட் தேர்வு
மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டு வேலைகளையும் பார்த்துக்கொண்டு, வீட்டில் வளரும் ஆடுகளையும் மெய்த்து நன்றாக படித்து வந்த மாணவி சந்திரோதயா தன் மருத்துவக் கனவை நனவாக்க நீட் தேர்வு எழுதினார். ஆனால் முதல் முறை தேர்வில் 107 மதிப்பெண்கள் பெற்று அதிர்ச்சியடைந்தார். பெற்றோர் கூலி வேலை செய்வதால் கோச்சிங் சென்டர் செல்வதற்கு வசதி இல்லாத சூழலில் இரண்டாவது முறையும் நீட் தேர்வு எழுதி 254 மதிப்பெண்கள் பெற்றார்.
அரசுக்கு நன்றி கூறிய குடும்பத்தினர்
இதனால் அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் என மற்றவர்கள் ஏளனம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர் பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் விடா முயற்சியாக படித்து மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதி 497 மதிப்பெண்கள் எடுத்து 7.5 சதவீதம் அரசு உள்ஒதுக்கீட்டில் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்து பெற்றோருக்கு பெருமை தேடித் தந்துள்ளார். விடாமுயற்சி தன்னம்பிக்கையால் படித்து வெற்றி அடைந்திருப்பதாகவும், தன்னைப்போல் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு இட ஒதுக்கீட்டை 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மாணவி சந்திரோதயா.
மேலும் தான் இருதய நோய் நிபுணர் ஆகி ஏழைஎளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றும் இதற்கு வழிவகை செய்து கொடுத்த தமிழக அரசுக்கு மாணவி நன்றி தெரிவித்தார். மகளின் கனவு நிறைவேறுவதற்காக அவர் இரவில் படிக்கும் போது தாங்களும் விழித்து கொண்டு காத்திருந்ததாகவும், விடா முயற்சியாலும் அரசின் உதவியாலும் தன்மகள் தற்போது மருத்துவபடிப்பு படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளதால் தமிழக அரசுக்கு பெற்றோர்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
ஏழ்மை நிலை
இதைப் பற்றி மாணவி சந்திரோதயா கூறுகையில், “நான் மூன்று முறை நீட் தேர்வு எழுதியுள்ளேன். எனது விடாமுயற்சியும் எனது பெற்றோர் கொடுத்த ஊக்கம்தான் நீட் தேர்வில் 497 மதிப்பெண்கள். நாங்கள் அனைவரும் கூரை வீட்டில் தான் வசிக்கிறோம், வீட்டிற்கு கூரை கூட போடுவதற்கு எங்களுக்கு காசு இல்லை, கூரைகள் அனைத்தும் சிதலமடைந்து பொத்தல் பொத்தலாக இருக்கும். சில நேரங்களில் மழை பெய்து வீடு மழை நீரால் நிரம்பும். சில நேரங்களில் கரண்ட் கட் ஆகிவிடும். மெழுகுவர்த்தி ஏந்தி எனது படிப்பை நான் தொடர்ந்தேன். எனது அப்பா, அம்மா கூலி வேலைக்குச் செல்வார்கள். வீட்டில் சிறுசிறு வேலைகளும், ஆடுகள், மற்றும் கோழிகளை பார்த்துக் கொண்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டு இருந்தேன்.
முதலில் நீட் தேர்வு எழுதும் போது எனக்கு போதிய மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. மீண்டும் விடாமுயற்சியில் படித்து எழுதினேன் அப்பொழுதும் 254 மதிப்பெண்கள் எடுத்தேன். அதும் எனக்கு போதுமான மதிப்பெண்கள் இல்லை. நான் அதிக மன உளைச்சலில் இருந்தேன். எனது உறவினர்கள் என்னை ஏளனம் செய்தார்கள். அப்போது என் தாய் தந்தையர் நீ திரும்பவும் விடாமுயற்சியாக நன்றாக படி, நாங்கள் இருக்கிறோம் என்று ஊக்கம் கொடுத்தார்கள். நீ கண்டிப்பாக டாக்டராக வேண்டுமென்று எனது தாய் தந்தைகள் எனக்கு தன்னம்பிக்கையை வளர்த்தார்கள். நான் மீண்டும் படித்தேன் இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாக படிப்பிலேயே கவனம் செலுத்தினேன். அதற்கான பலன் தான் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதி 497 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றேன்” என கண்ணீர் மல்க கூறினார்.
ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு இட ஒதுக்கீட்டை 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கையை விடுத்தார். ஏழை எளிய மாணவர்கள் யார் எது சொன்னாலும் கேட்க வேண்டாம் உங்கள் மனதில் பட்டதை நீங்கள் செய்யுங்கள், விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் நம் மனதில் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று பெருமிதத்துடன் கூறினார். மேலும் குடும்ப சூழ்நிலையால் மிகவும் கஷ்டப்படுகிறோம் எனது தாய் தந்தையர் எங்களை கூலி வேலை செய்துதான் காப்பாற்றுகிறார்கள். அரசு உதவிக்கரம் நீட்டினால் எனது மருத்துவ படிப்புக்கு பேரு உதவியாக இருக்கும் எனவும், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். விடாமுயற்சியுடன் படித்து வெற்றிபெற்று மருத்துவ படிப்பு படிக்கபோகும் மாணவிக்கு பொதுமக்கள் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.