"கேக் வேண்டாம்... தங்கச்சி தான் வேணும்!" - 9 வயதுச் சிறுவனின் பிறந்தநாள் கோரிக்கையால் கலங்கிய ஆட்சியர் அலுவலகம்..
பெற்றோர் பிரிவால் பிரிக்கப்பட்ட தனது தங்கையைப் பிறந்தநாள் பரிசாகத் தன்னிடம் சேர்த்து வைக்கக் கோரி மயிலாடுதுறையில் 9 வயதுச் சிறுவன் ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் அனைவரையும் கலங்க செய்துள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், வழக்கமாக வரும் நிலப் பிரச்சனை, முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் கோரும் மனுக்களுக்கு மத்தியில், அனைவரது கவனத்தையும் ஈர்த்து, நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
பெற்றோர் இடையேயான குடும்பப் பிரச்சனையால் பிரிந்து சென்ற தனது செல்லத் தங்கையைத் தன்னிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்று 9 வயதுச் சிறுவன் அளித்த கண்ணீர் மனு, அங்கு கூடியிருந்த அரசு அதிகாரிகளையும் பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
குடும்பப் பிணக்கால் பிரிந்த உடன்பிறப்புகள்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், தேரழந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஸாத் அலி. இவரது 9 வயது மகன் அல் அப்சார். ஆஸாத் அலிக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, கடந்த மூன்றரை ஆண்டுகளாக இருவருமே தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பெற்றோர் பிரிந்தபோது, 9 வயதுச் சிறுவன் அல் அப்சார் தனது தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வர, அவனது 5 வயதுத் தங்கையை தாய் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார்.
பெற்றோரின் கருத்து வேறுபாடு, எந்தப் பாவமும் அறியாத அந்த பிஞ்சுப் குழந்தைகளின் உலகை முற்றிலும் தலைகீழாக மாற்றிப்போட்டது. பிறந்து சில ஆண்டுகளிலேயே தனக்குக் கிடைத்த அன்புச் செல்வமான தங்கையைப் பிரிந்த சிறுவன் அல் அப்சார், கடந்த மூன்றரை ஆண்டுகளாகத் தனது தங்கையைக் காண்பதற்காக ஏங்கித் தவித்துள்ளான்.
தங்கையைப் பார்க்க விடுக்கப்பட்ட தடைகள்
ஒன்றாக விளையாட வேண்டிய வயதில், உடன் பிறந்த தங்கையைப் பார்க்க முடியாமல் தவித்த சிறுவன், பலமுறை தனது தாயிடம் தங்கை அல்ஃபியாவைப் பார்க்க முயற்சி செய்துள்ளான். ஆனால், குடும்பப் பகை மற்றும் பெற்றோரின் கோபம் காரணமாக, தாயார் அந்தச் சிறுவனைத் தங்கையைச் சந்திக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தான் நேசிக்கும் தங்கை அருகில் இருந்தும், அவளைத் தொட்டுப் பேசவோ, அவளோடு விளையாடவோ முடியாமல் போனது அந்தச் சிறுவனின் பிஞ்சு மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியது. "பெற்றோர்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம், அதற்காக உடன் பிறந்த தங்கையை என்னிடமிருந்து பிரிப்பது நியாயமா?" என்ற கேள்வி அந்தச் சிறுவனின் மனதை ஆழமாகப் பாதித்துள்ளது.
பிறந்தநாள் பரிசாகக் கேட்ட பாசம்
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்குத் தனது தந்தையுடன் வந்த சிறுவன் அல் அப்சார், நேராக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து ஒரு மனுவை அளித்தான். அதில், பள்ளிக்குச் செல்வது, மாலையில் விளையாடுவது என அனைத்து தருணங்களிலும் தனது தங்கையுடன் சேர்ந்து வாழவே தான் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளான்.
மேலும், வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரவுள்ள தனது பிறந்தநாளுக்கு எந்தப் பொருளும் வேண்டாம் என்றும், பெற்றோர் மனக்கசப்பால் பிரிந்து வாழும் தனது அன்புத் தங்கையைத் தன்னிடம் சேர்த்து வைப்பதே தனக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பிறந்தநாள் பரிசு என்றும் அந்த மனுவில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளான்.
கண்கலங்கிய ஆட்சியர் அலுவலகம்
சிறுவன் அல் அப்சார் அளித்த மனுவைப் படித்த அதிகாரிகள் அனைவரும் ஒரு கணம் உறைந்து போயினர். பெற்றோர்களின் கோபத்தாலும் பிடிவாதத்தாலும் இடையே நசுங்கிப் போகும் குழந்தைகளின் பாசப் போராட்டத்தைக் கண்டு, அங்கு மனு அளிக்க வந்திருந்த பொதுமக்கள் பலரும் கண்கலங்கினர். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட அதிகாரிகள், இந்த விவகாரம் குறித்துச் சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் உரிய விசாரணை நடத்தி, சட்டப்பூர்வ நடவடிக்கைகளின்படி சிறுவனுக்கு அவனது தங்கையைச் சந்திக்க வைப்பதற்கான அல்லது உடன்பிறந்தவர்களின் பாசம் தடைபடாமல் இருக்க வழிவகை செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.
பெற்றோர் சண்டையால் பிரிந்த தங்கையை, தனது பிறந்தநாள் பரிசாகக் கேட்கும் 9 வயதுச் சிறுவனின் இந்த பாசக் போராட்டம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















