நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர் பலியான நிலையில், உயிருக்குப் போராடும் கணவரை மீட்கக் கோரி ஆட்சியர் அலுவலகத் தரையில் புரண்டு கதறிய மனைவியால் பெரும் சோகம் நிலவியது.

மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சவூதி அரேபியா கடற்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில், அங்கே புகுந்த ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூரத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒட்டுமொத்த மீன்பிடி சமூகத்தையும் பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் மாவீரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கீழ்மூவர் கரை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்ற மீனவர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
துயரத்தில் உறைந்த மீனவ கிராமங்கள்
சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் என மொத்தம் நான்கு பேர் சவூதி அரேபியா நாட்டில் தங்கி, அந்நாட்டு கடற்பகுதியில் வழக்கம்போல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கடலில் நுழைந்த ஈரானிய கடற்கொள்ளையர்கள், இவர்களது படகை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் திடீர் தாக்குதலில் குண்டு பாய்ந்து மாவீரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். படுகாயமடைந்த சங்கர் அங்குள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி செய்தி வெளியானதிலிருந்து, அவர்களின் சொந்த கிராமங்களான தொடுவாய் மற்றும் கீழ்மூவர் கரை பகுதியில் சோக அலை வீசி வருகிறது.
ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த உறவினர்கள்
இந்நிலையில், சவூதி அரேபியா மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் சங்கருக்கு உயர்தர மற்றும் உரிய மருத்துவச் சிகிச்சைகளை வழங்கி, அவருடைய உயிரைக் காப்பாற்றி விரைவாகத் தாயகம் அழைத்து வர அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். மேலும், உயிரிழந்த மாவீரனின் உடலை உடற்கூறாய்வுக்குப் பின் தாயகத்திற்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் கண்ணீர்மல்க மனு அளித்தனர்.
நெஞ்சை உருக்கிய கதறல் காட்சி
மனு அளிக்க வந்த இடத்தில் சங்கரின் மனைவி அமுதா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண் உறவினர்கள் தாங்க முடியாத துக்கத்தால் உறைந்து போயினர். கணவரின் நிலைமை என்னாகுமோ என்ற அச்சத்தில் கதறி அழுத அமுதா, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தலைவிரி கோலமாகத் தரையில் புரண்டு அழுது புலம்பிய காட்சி அங்கே கூடியிருந்த அதிகாரிகளையும் பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தலையில் அடித்துக்கொண்டு, "என் கணவரைக் காப்பாற்றி மீட்டுத் தாருங்கள்" என அவர் எழுப்பிய ஆக்ரோஷமான மற்றும் தீனமான குரல், அங்கே நின்றிருந்த அனைவரின் நெஞ்சையும் உருக்கும் வகையில் அமைந்தது.
அரசுக்கு வலுக்கும் கோரிக்கைகள்
பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாகப் பல மீனவ அமைப்புகளும் களமிறங்கியுள்ளன. வெளிநாட்டில் தொழில் செய்யச் சென்ற இடத்தில் உரிய பாதுகாப்பு இல்லாமல் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்கதையாகி வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, காயமடைந்த சங்கருக்குச் சிறந்த சிகிச்சையை உறுதி செய்வதோடு, மாவீரனின் உடலை உடனடியாகச் சொந்த ஊருக்குக் கொண்டுவர ஆவன செய்ய வேண்டும் எனப் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















