பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரஸா அருகே டாஸ்மாக் கடை திறக்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் திரண்டு மனு அளித்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தில் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரஸா இயங்கி வரும் சூழலில், அதன் அருகிலேயே புதிதாக அரசு டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. விதிமுறைகளுக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த முயற்சியால் தங்களின் கிராம அமைதி முற்றிலும் சீர்குலைந்துவிடும் எனக் கூறி, பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பினரும் பொதுமக்களும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன், கடையை உடனடியாகத் தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
வழிபாட்டுத் தலங்கள் சூழ அமைந்த குடியிருப்புப் பகுதி
சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பெருந்தோட்டம் கிராமம் பல தலைமுறைகளாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் ஒரு அமைதியான கிராமமாகும். இந்த கிராமத்தின் மையப்பகுதியில் புகழ்பெற்ற ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் அமைந்துள்ளது. மேலும், தினமும் நூற்றுக்கணக்கான பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மட்டுமே தங்கி ஆன்மீகக் கல்வி பயிலும் பெண்கள் மதரஸா, இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலம் மற்றும் பழமையான இந்து திருக்கோயில்களும் இதே பகுதியில் அருகருகே அமைந்துள்ளன. தினசரி வழிபாடுகளுக்காகவும், கல்வி கற்றலுக்காகவும் பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் நடமாடும் இந்த முக்கியச் சந்திப்பில் புதிய டாஸ்மாக் கடையை நிறுவ டாஸ்மாக் அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
விதிமுறைகள் மீறப்படுவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு
அரசு விதிமுறைகளின்படி வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகளில் மதுபானக் கடைகள் அமைக்கக் கூடாது என்ற தெளிவான சட்ட வழிகாட்டுதல்கள் நடைமுறையில் உள்ளன. இருப்பினும், இந்த விதிகளையும் சட்ட நெறிமுறைகளையும் முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, பெருந்தோட்டம் கிராமத்தின் மிக முக்கியமான வழிபாட்டு மண்டலத்திற்குள் டாஸ்மாக் கடையைத் திறக்க முற்படுவது சட்டத்திற்குப் புறம்பானது என்று கிராமப் பெரியோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இங்கு மதுக்கடை அமைக்கப்பட்டால், போதை ஆசாமிகளின் அநாகரிகமான செயல்களால் வழிபாட்டிற்கு வரும் பெண்களுக்கும், மதரஸாவில் பயிலும் மாணவிகளுக்கும் எவ்வித பாதுகாப்பும் அற்ற சூழல் உருவாகும் என்றும், இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பு மற்றும் எச்சரிக்கை
இந்தச் சூழலில், பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, டாஸ்மாக் கடை அமைப்பதைக் உடனடியாகக் கைவிட வலியுறுத்தும் கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்தனர். அந்த மனுவில், மக்கள் நடமாட்டமும் ஆன்மீகச் சூழலும் நிறைந்த இடத்தில் மதுக்கடை அமைந்தால் கிராமத்தின் பொது அமைதி முற்றிலும் சீர்குலைந்துவிடும் என்றும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை உடனடி நடைமுறைக்கு வராதவாறு ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
மேலும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், கிராம மக்களை ஒன்றுதிரட்டி அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்துத் தொடர் போராட்டங்கள் மற்றும் சாலை மறியல் சம்பவங்களில் ஈடுபடப்போவதாக கிராமப் பிரதிநிதிகள் உறுதியுடன் எச்சரித்துச் சென்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















