Tasmac Mayiladuthurai : சீர்காழி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 4 மணிநேரம் சாலைமறியல் போராட்டம்
சீர்காழி அருகே செயல்பட்டு வரும் மதுபான கடையை அகற்ற கோரி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![Tasmac Mayiladuthurai : சீர்காழி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 4 மணிநேரம் சாலைமறியல் போராட்டம் Mayiladuthurai 4 hour roadblock protest demanding removal of Tasmac shop near Sirkazhi - TNN Tasmac Mayiladuthurai : சீர்காழி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி 4 மணிநேரம் சாலைமறியல் போராட்டம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/b1f842add794e9acfb207a01c247ead11705064946216733_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி நான்கு மணி நேரமாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இடமாற்றம் செய்வதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தில் பிரதான சாலையோரம் அரசு மதுபானகடை அமைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும், அரசு உயர் நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த அச்சத்துடனே இப்பகுதியை கடந்து சென்று வருகின்றனர்.
எனவே பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபான கடையை அகற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் திருமுல்லைவாசல், வழுதலைக்குடி உள்ளிட்ட டாஸ்மாக் கடை அமைந்துள்ள சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இணைந்து அரசு மதுபான கடை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கடையை முற்றுகையிட்ட அவர்கள் முயன்றனர் அப்போது அங்கு குவிக்க பட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுப்புகளை கொண்டு தடுத்து நிறுத்தினர். ஆனால் அதற்கு கட்டுப்படாமல் அந்த தடுப்புகளை தூக்கியெறிந்து மீறி கடையை முற்றுகையிட்ட முயன்றனர்.
அவர்களை கடை வாசலில் காவல்துறையினர் போராடி தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் கிராமமக்கள் 200 -க்கும் மேற்பட்டோர் பழையார் சீர்காழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சீர்காழி - திருமுல்லைவாசல் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் காவல்துறையினர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் வருவாய்துறை உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உறுயாக தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர்.
மேலும் நீண்ட நேரம் கடந்தும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வராததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கான மதிய உணவை சாலையிலேயே அடுப்பு அமைத்து சமைக்க துவங்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா மற்றும் சீர்காழி காவல்துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார், டாஸ்மாக் கண்காணிப்பாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நீடித்த பேச்சு வார்த்தையின் முடிவில் வரும் பிப்ரவரி மாதம் 20 -ஆம் தேதிக்குள் அரசு மதுபான கடை இடமாற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். அதனை ஏற்று சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)