Lok sabha election 2024: மயிலாடுதுறை வேட்பாளரை போலீஸ் வைத்து காங்கிரஸ் தேடுகிறது - ஓ.எஸ்.மணியன் கிண்டல்
மயிலாடுதுறையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர்?
இந்தியா நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைப்பது தொடர்பான பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுப்பட்டு ஒருவழியாக கூட்டணிகளை உறுதி செய்து, அவர்களுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து தற்போது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் முடிவான நிலையில் இன்னும் தமிழகத்தில் இரண்டு தொகுதியில் வேட்பாளர் யார்? என்பதை வெளியிடவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்களே மீதம் உள்ள நிலையில் இன்று வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்:
இந்நிலையில் மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். முன்னதாக நிர்வாகிகள் வேட்பாளர் பாபுவிற்கு மாலை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். பின்னர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசுகையில்,
முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்
காங்கிரஸ் கட்சியில் மயிலாடுதுறை தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளரை போலீஸ் வைத்து அக்கட்சியினர் தேடிக் கொண்டு இருக்கின்றனர், இன்னும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை, வேட்பாளர் டெல்லியில் இருந்து வருகிறாரா? அல்லது பாம்பேவில் இருந்து வருகிறாரா? என பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி இளைஞர்கள் அதிகமாக இருக்கக்கூடிய கட்சி என்றும், நாட்டில் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவற்றை தான் சிறுவயதில் இருந்து கற்றுக்கொண்டது கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் தான், ஆனால் தற்போது அவர்கள் போராட்டத்தை மறந்து பல நாட்கள் ஆகிவிட்டது, அவர்களின் கோஷம் அனைத்தும் ஸ்டாலின் வாழ்க மற்றும் திமுக வாழ்க என்று மட்டுமே உள்ளதாக விமர்சித்தார்.
அரசு ஊழியர்களை ஏமாற்றிய திமுக
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசு நம்மை ஏமாற்றியது கூட பரவாயில்லை. ஆனால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தப்படும் உட்பட பல்வேறு பொய் வாக்குறுதிகளை அவர்களிடம் தெரிவித்து திமுக அரசு ஏமாற்றியதாக குற்றம் சாட்டினார். அதன் விளைவாக தற்போது எங்கு பார்த்தாலும் அரசு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் , மின் ஊழியர்கள் உள்ளிட்டோரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போராட்டம் செய்தவர்களை அழைத்து அவர்களது நாக்கில் தேன் கூட இந்த அரசு வைக்கவில்லை, மாறாக பால்டாயில் மட்டும் தான் ஊற்றவில்லை என தெரிவித்தார்.
அதிமுக நிர்வாகிகள் காப்பு கட்டி கொள்ள வேண்டும்
மேலும் நிர்வாகிகள் தங்களது வீடுகளில் எடப்பாடி பழனிச்சாமியை நினைத்து காப்பு கட்ட வேண்டும் எனவும், தேர்தல் முடியும் வரை வெளியூருக்கு எங்கும் செல்லாமல் தீவிரமாக பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். தேர்தல் முடிந்த பிறகு அந்த வெற்றியை பழனிச்சாமிக்கு கொடுத்துவிட்டு பழனியாண்டவர் கோயிலில் காப்பை அவிழ்த்து விட்டு வர வேண்டுமென தெரிவித்தார்.