"தமிழ்நாட்டையே உலுக்கிய இரட்டை கொலை, கொள்ளை வழக்கு” இதுதான் தீர்ப்பு..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற இரட்டை கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் சரகம், சீர்காழி தடாளன் தெற்கு வீதியில் கடந்த 2021 -ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தன்ராஜ் சௌத்திரி என்ற நபர் தன் குடும்பத்துடன் வசித்தும், சீர்காழி மற்றும் பூம்புகார் பகுதியில் நகை அடகு கடை நடத்தியும் வந்துள்ளார். மேற்படி தன்ராஜ் சௌத்திரி என்பவரும் கும்பகோணம் பகுதியில் தொழில் செய்து வந்த வேளாராம் என்பரது மகன் கருணாராம் என்பவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.
கூட்டு சதி
இந்நிலையில் கருணாராம் தன்னுடன் வேலை பார்த்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெட்லாராம் என்பவரது மகன் மணிஸ், ஜெகராம் என்பவரது மகன் ரமேஷ் பட்டேல், சர்வன்சிங் என்பவரது மகன் மகிபால் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து தன்ராஜ் சௌத்திரியின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய உள்ளனர். அந்த திட்டத்தை தொடர்ந்து கடந்த 27.01.2021 -ம் தேதி அதிகாலை மேற்படி கருணாராமின் உதவியுடன் மனீஸ், ரமேஷ் பட்டேல், மகிபால் ஆகியோர் தன்ராஜ் சௌத்திரி வீட்டில் அத்துமீறி நுழைந்து, அவரையும் அவரது குடும்பத்தினரையும் பயங்கரமான ஆயுதங்களால் தாக்கி தன்ராஜ் சௌத்திரியின் மனைவி ஆஷா மற்றும் மகன் அகில் ஆகியோரை கொலை செய்துள்ளனர். மேலும் அவரது வீட்டில் இருந்து 12.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 6.75,000 ரூபாய் பணத்றை (மொத்த மதிப்பு 4,62,75,000/-) கொள்ளையடித்து சென்றனர்.

காவல்துறையினர் விசாரணை
இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சீர்காழி காவல் துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தன்ராஜ் சௌத்திரி அளித்த புகாரின் பேரில் சீர்காழி காவல் நிலையத்தில் ஆதாய கொலை, கொளை முயற்சி, சதி திட்டம் தீட்டுதல், மற்றும் படைக்கலன் ஈட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் புலன் விசாரணையை அப்போதைய சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் மேற்கொண்டார். மேற்படி ஆதாய கொலை குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகளான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனீஸ், ரமேஷ் பட்டேல், மகிபால் ஆகிய மூவரும் ஆணைக்காரன்சத்திரம் காவல் சரசும் எருக்கூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து மேற்படி எதிரிகள் மூவரையும் அப்போதைய சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

என்கவுண்டர்
மேற்படி நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் எதிரிகள் மூவரும் தாங்கள் பணிபுரியும் கருணாராம் என்பவருடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி, தன்ராஜ் சௌத்திரி வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்ததும், அதனை தடுக்க வந்த தன்ராஜ் சௌத்திரி மனைவி ஆஷா மற்றும் மகன் அகில் ஆகியோரை கொலை செய்ததும் உறுதி செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையில் சிறப்பு அலுவலாக அப்போதைய பொறையார் காவல் நிலைய ஆய்வாளர் செல்வம் மற்றும் காவல்துறையினர் மேற்படி சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இடத்தை காட்டுவதற்காக மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியான ராஜஸ்தான் மாநிலம், ஜோலார் மாவட்டத்தை சேர்ந்த மகிபால் என்பவரை தன்னுடன் அழைத்து சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத நேரத்தில் மகிபால் அந்த இடத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காவல் துறையினரை தாக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதில் காவல் ஆய்வாளர் செல்வம் தற்காப்பிற்காக தனது துப்பாக்கியால் சுட்டதில் எதிரி மகிபால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

பரபரப்பு தீர்ப்பு
பின்னர் இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான கும்பகோணம் பகுதியை சேர்ந்த கருணாராம் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு எதிரிகளுள் ஒரு எதிரி துப்பாக்கி சூட்டில் இறந்துவிட, மற்ற மூன்று எதிரிகளும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கையை அப்போதைய சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இவ்வழக்கின் விசாரணையானது மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பானது தற்போது வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கினை விசாரித்த அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயருமாரி இவ்வழக்கின் முதல் குற்றவாளியான மனிஷ் என்பவருக்கு மூன்று ஆயுள் தண்டனையும், 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மேலும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், மூன்றாவது குற்றவாளியான கருணாராம் என்பருக்கு 2 ஆயுள் தண்டனையும், 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், மேலும் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து மயிலாடுதுறை அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார்.
11 ஆயுள் தண்டனை
இவ்வழக்கில் இரண்டாவது குற்றவாளி ரமேஷ்பாட்டில் பிணையில் சென்று தலைமறைவான நிலையில், ரமேஷ் பாட்டில் தொடர்பான வழக்கை தனியாக கோர்ட்டில் அரசு தரப்பு நடத்திவரும் நிலையில், மற்ற இரண்டு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. வழக்கு தீர்ப்பின் பொழுது நேரில் பார்வையிட்ட மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலின், சிறப்பாக வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கு மாலை அணிவித்து சால்வை பொருத்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், இந்த ஆண்டு மட்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 11 வழக்குகளில் ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.






















