பெண் பிள்ளையை பெற்ற எந்த தந்தைக்கும் இந்த நிலை வரக்கூடாது - சோகத்தில் மூழ்கிய கிராமம்...!
சீர்காழி அருகே கர்ப்பிணி மகள் இறந்த தகவலை கேட்டு தந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த புளியந்துறை கிராமத்தை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி 70 வயதான வில்லு. இவருடைய மகள் 25 வயதான அருள்ஜோதி. சென்னையில் பணிபுரிந்து வந்த அருள்ஜோதி, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பாரிவாக்கம் பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி தமிழரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
ஆறுமாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
இந்நிலையில் தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்த அருள்ஜோதி நேற்று முன்தினம் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அறிந்த அவரது சகோதரர் அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த பேரின் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகள் இறந்த தகவலை கேட்ட தந்தை உயிரிழப்பு
இந்த சூழலில் அருள்ஜோதி இறந்த தகவலை மயிலாடுதுறை மாவட்டம் புளியந்துறை கிராமத்தில் இருக்கும் அவருடைய தந்தை வில்லுவுக்கு தெரிவிக்கப்பட்டது. கர்ப்பிணியாக இருந்த மகள் திடீரென இறந்தது தகவல் அவருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உச்சக்கட்ட சோகத்தில் உறைந்து போன அவர் புளியந்துறை கிராமத்தில் உள்ள தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்து அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிராம மக்கள் சோகம்
மேலும் சென்னையில் இருந்து உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் புளியந்துறை கொண்டுவரப்பட்ட நிலையில் ஒரே வீட்டில் தந்தை மற்றும் மகளின் உடல்கள் அருகருகே வைக்கப்பட்டிருந்ததை பார்த்து உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்களும் சோகத்தில் கதறி அழுதனர். கர்ப்பிணி மகள் இறந்த அதிர்ச்சியில் தொழிலாளி உயிரை விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காதல் திருமணத்தில் உள்ள சிக்கல்
புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு இடையே ஒருவருக்கு ஒருவர் புரிதல்கள் இன்றி சண்டைகள், சச்சரவுகள், விட்டுக்கொடுத்து போகும் தன்மை இல்லாமை, வாழ்க்கை குறித்த சரியான அறியாமை இல்லாமை போன்ற பல்வேறு பிரச்சனைகள் உருவாகி வருகின்றன. பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைக்கும் கணவன் மனைவிகளுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டால் சமாதானம் செய்ய உறவுகள் வருகிறார்கள். நல்ல விஷயங்களை எடுத்துக்கூற பலர் வருகிறார்கள். விட்டுக்கொடுத்துசெல்வதுபற்றியும், உறவுகளிடையே புரிதல்கள் பற்றியும் பக்குவமாக பேசி புரிய வைக்க முயற்சிக்கிறார்கள்.
தவறான முடிவெடுக்கும் தம்பதிகள்
ஆனால், காதல் திருமணத்தை பொறுத்தவரை இருவரது வீட்டில் ஏற்றுக்கொண்டாலும், நீயாக்கத்தானேபோனாய் என்று இரு வீட்டாரும் ஒதுங்கிக்கெள்ளும் நிலை உள்ளது. ஒருவேளை தம்பதிக்கு இடையே புரிதல் இல்லாமல் போனால், அது பெரிய சிக்கலாக முடிகிறது. சில நேரங்களில் நினைத்தே பார்க்க முடியாத முடிவை இருவருமே செய்கிறார்கள். காதலை தேர்வு செய்த வேகத்தைவிட, திருமணம் செய்வதில் முடிவெடுத்த வேகத்தைவிட வாழ்க்கையை முடித்துக் கொள்வதில் அதீத வேகத்தை காட்டுகிறார்கள்.






















