மத்திய அரசு விருது பெற்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
குழந்தை கடத்தல் தடுப்பு மற்றும் போதைபொருள் தடுப்பில் சிறந்த செயல்பாட்டிற்கான மத்திய அரசின் விருது பெற்ற மாவட்ட ஆட்சியர் மகாபாரதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
குழந்தை கடத்தல் தடுப்பு மற்றும் போதைபொருள் தடுப்பில் சிறந்த செயல்பாட்டிற்கான மத்திய அரசின் விருது பெற்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார்.
மத்திய அரசு விருது பெற்ற மாவட்ட ஆட்சியர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் துபிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கான கூட்டு நடவடிக்கைத் திட்டத்தை (Joint Action Plan) வெற்றிகரமாக செயல்படுத்தியதன் அடிப்படையில் சிறந்த செயல்திறன் கொண்ட மாவட்டங்களில் ஒன்றாகத் தேசிய மதிப்பாய்வு மற்றும் கலந்தாய்வு குழுவினால் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் National Commission for Protection of Child Rights (NCPCR) கடந்த 30.06.2024 ஞாயிற்று கிழமை அன்று டெல்லியில் நடைப்பெற்ற விருது வழங்கும் விழாவில் உள்துறை அமைச்சர் (மாநில) மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு நற்சான்றிதழ் மற்றும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
போதை பொருள் தடுப்பில் பல்வேறு நடவடிக்கைகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 172 தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கல்வி துறை மற்றும் பள்ளிகளில் போதை தடுப்பு கிளப் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி வழங்கப்பட்டது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போதை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கொடுக்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட உறுப்பினர்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு போதை பொருள் தடுப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி வழங்கப்பட்டது. தொழிலாளர் துறை, காவல்துறை, சுகாதாரத் துறை, மற்றும் கல்வி துறைகளுடன் இணைந்து பேருந்து நிலையம் இரயில் நிலையம் போன்ற இடங்களில் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி அளிக்கப்பட்டது.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
மயிலாடுதுறையில் உள்ள அனைத்து கல்வியியல் கல்லூரிகளில் (B.ed.,) குழந்தை உரிமை மன்றம் என்ற கிளப் (Prahari Clubes) உருவாக்கப்பட்டு கிளப் உறுப்பினர்களுடன் இணைந்து ரோல் பிளே ஸ்கிட் போன்ற நிகழ்ச்சிகளை பள்ளிக்கு அருகில் உள்ள இடங்களில் நடத்தப்பட்டது. மயிலாடுதுறையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாவட்ட காவல்துறையுடன் இணைந்து துண்டு பிரசுரங்கள் வழங்கி, கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி வழங்கப்பட்டது. தன்னார்வல அமைப்புகள் மூலம் போதை பொருள் தடுப்பு குறித்து அனைத்து குழு உறுப்பினர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வழங்கப்பட்டது.
18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போதை பொருள் மருந்து விற்பனை செய்வதை தவிர்க்க அனைத்து மருத்துவ கடைகளிலும் மருந்து கட்டுப்பாட்டு துறையுடன் கேமராக்கள் அமைக்கப்பட்டது. உணவு மற்றும் பாதுகாப்பு துறையுடன் இணைந்து பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் போதைபொருள் விற்பனை செய்யப்படுகிறதா? என மாதந்தோறும் ஆய்வுகள் நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் சைல்டு ஹெல்ப் லைன் (1098) மூலம் போதை பொருள் தொடர்பான ஏதேனும் வழக்குகள் இருந்தால் குறிப்பிட்ட மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்துநர் (Counsellor) மூலம் ஆற்றுப்படுத்துதல் (Counselling) வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து பள்ளி, கல்லூரி மற்றும் பொது மக்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வழங்கப்பட்டது.
உடனுக்குடன் பதிவேற்றம்
குழந்தைகள் நலம் சார்ந்த துறைகளுடன் இணைந்து போதை பொருள் தடுப்பு குறித்த கூட்டம் நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. போதை பொருள் பயன்படுத்துவதனால் வரும் பின்விளைவுகள் குறித்து இளைய தலைமுறையினருக்கு அது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்திகிறது என்பது பற்றிய விழிப்புணர்வை அளிக்கும் வகையில் அரசு சாரா (NGO) அமைப்புகளுடன் இணைந்து பள்ளி மாணவர்களுடன் பேரணி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பேருந்து நிலையங்கள் மற்றும் சிறு கடைகளில் மாணவர்கள் கூடும் இடங்களில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் மற்றும் சைல்டு ஹெல்ப் லைன் (1098) கள பணியாளர்களுடன் இணைந்த Child Rescue Operation நடத்தப்பட்டது. இதுபோன்ற ஏராளமான போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு NCPCR PORTAL-லில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டது.
சிறந்த மாவட்டமாக தேர்வான மயிலாடுதுறை
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டிலே சிறந்த மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு, குழந்தை கடத்தல் தடுப்பு மற்றும் போதைபொருள் தடுப்பில் சிறந்து விளங்கியமைக்காக ஒன்றிய அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், குழந்தை கடத்தல் தடுப்பு மற்றும் போதைபொருள் தடுப்பில் சிறந்து விளங்கியதற்கு ஒன்றிய அரசின் விருது பெற்றமைக்காக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வின்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சமூக பாதுகாப்பு இயக்குநர் அமர் குஷ்வாஹா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.