Women's day Special :இனி ஒரு விதி செய்வோம்..! அந்தரத்தில் தொங்கி வண்ணம் தீட்டும் சிங்கப்பெண்கள்... எங்கே தெரியுமா...?
நூறு அடி கட்டிடம் என்றாலும், அஞ்சாமல் கயிறு ஏணியில் தொங்கி வர்ணம் பூசும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள்.

தடைதனை உடைத்திடு விடைதனை அடைந்திடு.. என்பதற்கு ஏற்ப மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சிங்கப்பெண்கள் தமிழகத்திலேயே முதல் முறையாக பல அடி உயர கட்டிடங்களுக்கு வண்ணம் பூசும் வேலையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
ஆணுக்கு பெண் நிகராக களம் கண்ட பெண்மணிகள்
தமிழகம் மட்டும் தான் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொண்டே செல்லும் மாநிலமாகவும் ஏன் இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக இருந்து வருவதாக பொதுவான கருத்து ஒன்று நிலவி வருகிறது. வேலை வாய்ப்பை பொறுத்தவரையில் அதிக அளவில் ஆண்கள் மட்டுமே செய்து வரக்கூடிய நிலையில் அதற்கு நிகராக தற்போது பெண்களும் களம் இறங்கி தங்கள் திறமைகளை காட்டி வருகின்றனர்.

பெயிண்டிங் வேலை
நாம் அன்றாடம் பார்க்கக்கூடிய வேலையிலான கிராமப்புறங்களில் விவசாய வேலை, நூறு நாள் வேலை, கட்டிடம் வேலை இதுதான் அதிக அளவில் இருந்து வருகிறது. இதில் பெண்கள் குறைவாக தான் இருந்து வருவார்கள். விவசாய வேலை என்றால் களை எடுத்தல், நடுவு நடுதல், கட்டிட வேலை என்றால் சித்தாள் வேலை மட்டுமே செயல்படுவார்கள். தற்பொழுது படித்த பெண்கள் அலுவலக வேலையில் மட்டுமே மேற்கொள்கின்றனர். அதேபோலத்தான் ஒரு கட்டிடத்தை எப்படி கட்டினாலும் அதற்கு வர்ணம் பூசினால் மட்டுமே தான் அந்த அந்த கட்டிடத்திற்கான முழு தோற்றமும் தெரியவரும். வர்ணம் பூசும் வேளையில் ஆண்கள் மட்டுமே முழுவதுமாக வேலை செய்து வருவார்கள்.

மயிலாடுதுறை பெண்மணிகள்
ஆனால் தற்பொழுது தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே முதன் முதலாக வர்ணம் பூசம் வேளையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் களமிறங்கி கடந்த நான்கு ஆண்டுகளாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அதற்கான அங்கீகாரத்தை பதித்து வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலை அடுத்த திருப்புங்கூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள்தான் தற்பொழுது ஆண்கள் மட்டுமே செய்து வந்த வேலையை தகர்த்தெறிந்து பெண்களாகிய நாங்களும் இந்த வேலையை செய்வோம் என்று களத்தில் இறங்கி முழு எஃபெக்டை போட்டு சாதித்து வருகின்றனர்.

உயரங்களை கண்டு அச்சம் கொள்ளாத பெண்கள்
பெண்களா...இந்த வேலையில்? என்று கேட்பவர்களை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு நூறு அடி அந்தரத்திலும் தொங்கி தங்கள் திறமைகளை காட்டி வருகின்றனர். கட்டிடம் கட்டி முடித்தவுடன் வர்ணம் பூசி வேலைக்கான பட்டி தேய்த்தல், பிரேமர் அடித்தல், வீட்டிற்கான அந்தந்த பகுதிக்கான வர்ணத்தை தேர்ந்தெடுத்து வீட்டின் உரிமையாளரை வியக்க வைக்கும் வகையில் செய்து வருகின்றனர். அதுவும் திருமணம் ஆகி இரண்டு மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்த பெண்கள் 100 அடி வரையிலானா கட்டிடத்தில் அந்தரத்திலும் கயிற்றில் தொங்கியபடியே வர்ணம் பூசி அந்த வீட்டையே சிறப்பாக மாற்றி காட்டி வருகின்றனர்.

25 பெண்கள்
அவர்கள் தான் திருப்பங்கூரை சேர்ந்த வனிதா மற்றும் மஞ்சுளா, இவர்கள் இருவருமே கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் ஏழை குடும்பத்தில் வறுமையின் பிடியில் சிக்கிய இவர்கள் கணவர்களின் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்துவதில் பெரும் சிரமம் அடைந்தவர்கள், குடும்ப சூழ்நிலையால் வேலைக்கு சென்று குடும்ப வருமானத்தை உயர்த்த வேண்டும் என்று எண்ணத்தில் தனியார் பெயிண்ட் நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் கட்டிடங்களை முழுமையாக பெண்களே சென்று வர்ணம் பூசி வருகின்றனர். இதுவரை பெண்கள் வர்ணம் பூசும் வேலைகளில் இருந்து பார்த்ததே இல்லை என்றும், தற்போது இவர்களை பார்க்கும்போது பெரும் ஆச்சரியத்துடன் இருப்பதாகவும் ஆண்களைவிட பெண்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு வந்து சிறப்பாக செய்வதாகவும், மனதிற்கு திருப்த்தி இருக்கும் அளவிற்கு தற்பொழுது இந்த பெண்கள் சுமார் 25 பேர் மயிலாடுதுறை மாவட்டத்தை கலக்கி வருகிறார்கள்.

குவியும் பாராட்டுக்கள்
அதிகாலையில் 5 மணிக்கு எழுந்து சமைத்து வைத்து விட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவரை வேலைக்கு அனுப்பி விட்டு குறித்த நேரத்தில் வேலைக்கு வந்து குறித்த நேரத்தில் வேலையை சொன்னபடி செய்துவிட்டு வீடு திரும்பும் இவர்களுக்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
அரசுக்கு கோரிக்கை
மேலும் இந்த பெண்கள் அரசுக்கு வைக்கக்கூடிய கோரிக்கையாக தங்களுக்கு அரசு திட்டங்களில் வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும், அதற்கான உபகரணங்களை வாங்குவதற்கு வங்கிகளின் மூலம் மானியத்துடன் கூடிய கடன்களை வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் தங்களைப் போன்று பல பெண்களையும் இந்த தொழிலில் சேர்த்து பெண்களின் முன்னேற்றத்திற்கு ஊக்குவிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் கூலி வேலைக்கு சென்றால் ரூபாய் 100 முதல் 300 மற்றும் தின கூலியாக கிடைக்கும் என்றும், மற்றபடி மளிகை கடைக்கு வேலைக்கு சென்றாள் ஒரு மாதம் ரூபாய் 10 ஆயிரத்துக்குள்ள வேலை தான் கிடைக்கும் என்றும், தற்போது இந்த வர்ணம் பூசும் வேலையில் ஒரு நாளைக்கு ரூபாய் 900 சம்பளம் கிடைப்பதாகவும், இதன் மூலம் கணவரின் சம்பளத்தை எதிர்பார்க்காமல் குடும்ப சூழ்நிலையை உயர்த்தவும், பிள்ளைகளை நல்ல வழியில் படிப்பதற்கு செலவு செய்யவும் இந்த வருமானம் தங்களுக்கு போதுமானதாக இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். பல்வேறு வங்கி கடன், குழு கடன் என்று சிக்கி சீரழிவதை விட இதுபோன்று மனதிற்கு திருப்தியான தொழில் செய்து தங்கள் குடும்பத்தை காப்பாற்றுவோம் என்று இந்த பெண்கள் தெரிவிக்கின்றனர்.






















