Pongal Parisu Thogai 2024: பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்.. புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு..
பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பினை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளிடம் இருந்து விகிதாசார அடிப்படையில் வாங்க நடவடிக்கை எடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Pongal Parisu Thogai 2024: பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்.. புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு.. Action to procure sugarcane from all farmers in Mayiladuthurai district Pongal package Tn Government Pongal Parisu Thogai 2024: பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்.. புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/06/815c3c87a4744596eff42b196392f7431704553073968733_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தற்போது அரசு பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பொங்கல் பரிசு வழங்கப்படும் கரும்பினை மாவட்ட அளவில் கரும்பு விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண்துறை இணை இயக்குனர், கூட்டுறவு துறை இணை பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரை கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை வட்டம் மன்னம்பந்தல் ஊராட்சியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்காக கொள்முதல் செய்ய உள்ள முழு நீள கரும்புகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைத்து மக்களும் சிறப்பாக கொண்டாடிடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு 1000 ரூபாய் ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 432 நியாயவிலை கடை இயங்கி வருகிறது. அதில் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிடும் வகையில் நாளை முதல் 10.1.2024 வரை வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக தகுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகளை கண்காணிக்க மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பின் உயரம் 6 அடி இருக்க வேண்டும். எனவே கரும்பு கொள்முதலை பொருத்தவரை விகிதாச்சார முறையில் அனைத்து விவசாயிகளிடமிருந்தும் கரும்புகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
இவ்வாய்வின் போது வேளாண்மைதுறை இணை இயக்குநர் சேகர், நுகர்பொருள் வாணிப்பழக முதுநிலை மண்டல மேலாளர் திருப்பதி, துணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பானுகோபன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர். மேலும் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்த புகார்களை பெறுவதற்கு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, புகார்கள் ஏதுமிருப்பின் நடமாடும் கண்காணிப்பு குழுவிற்கு அதனை தெரிவித்து உடனுக்குடன் புகார்களை தீர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 1967 மற்றும் 1800-425-5901, 9750048242 ஆகிய எண்களிலும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)