Pongal Prize 2024: பொங்கல் பரிசுத்தொகுப்பு! 12ம் தேதி அனைத்து நியாய விலைக்கடைகளும் இயங்கும் - அரசு அறிவிப்பு
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு வரும் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளும் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை பிறக்க உள்ள நிலையில், ரூபாய் 1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழர்களின் பண்டிகையாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய திருவிழாவாகவும் கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குவதை தமிழக அரசு வழக்கமாக வைத்துள்ளது.
ரேசன் கடைகள் இயங்கும்:
இதன்படி, நடப்பாண்டில் ரூபாய் 1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகள் ஆண்டுதோறும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகள் மூலமாக நடைபெறுகிறது. இதையடுத்து, நடப்பாண்டிற்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 10ம் தேதி முதல் வரும் 13ம் தேதி வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் விதத்தில், வரும் 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) இயங்கும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 13ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இயலாதவர்கள் வரும் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு:
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்களுடன் ரூபாய் 1000 ரொக்கம் வழங்கப்பட உள்ளது. தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழ்நாடு முழுவதும் உள்ள 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்கள் பெற உள்ளனர். பொங்கல் பரிசுத்தொகுப்பிற்காக வழங்கப்பட உள்ள கரும்புகளை கொள்முதல் செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழக்கமாக இடம்பெறும் வெல்லம் இடம்பெறாதது வெல்லம் உற்பத்தியாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு சர்க்கரை அட்டை மற்றும் பொருளில்லா அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Pongal Parisu Thogai 2024: நாளை முதல் டோக்கன்.. 10-ஆம் முதல் தொடங்கும், பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்.. முழு ரிப்போர்ட்
மேலும் படிக்க: Pongal Parisu Thogai 2024: பொங்கலுக்கு ரூ.1000 இருக்கு.. ஆனா யாருக்கு கிடைக்கும்? யாருக்கு இல்லை? முழு விவரம்..