Denmark Warns America: ''முதல்ல சுடுவோம், அப்புறம் தான் பேசுவோம்''; க்ரீன்லாந்து விவகாரம்; US-க்கு டென்மார்க் வார்னிங்
அமெரிக்கா கிரீன்லாந்தை ஆக்கிரமித்தால், வீரர்கள் முதலில் சுட்டுவிட்டு பின்னர் தான் கேள்விகளை கேட்பார்கள் என டென்மார்க் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிரீன்லாந்தை வாங்கவோ அல்லது கைப்பற்றவோ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் யோசித்து வரும் நிலையில், அமெரிக்கா கிரீன்லாந்தை ஆக்கிரமித்தால், படை வீரர்கள் முதலில் சுட்டுவிட்டு, பின்னர் தான் கேள்விகளை கேட்பார்கள் என்று டென்மார்க் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது 1952-ம் ஆண்டு ராணுவத்தின் ஈடுபாட்டு விதியின்படி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டென்மார்க் சட்டம் சொல்வது என்ன.?
கிரீன்லாந்து மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிவைத்துள்ள நிலையில், அமெரிக்கா கிரீன்லாந்தை ஆக்கிரமித்தால், வீரர்கள் முதலில் சுட வேண்டும், பின்னர் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று டென்மார்க் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 1952 ஆம் ஆண்டு இராணுவத்தின் ஈடுபாட்டு விதியின்படி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, உயர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு காத்திருக்காமல் தங்கள் நாட்டின் மீது படையெடுப்பவர்கள் மீது வீரர்கள் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த உத்தரவின் நிலை குறித்து டென்மார்க் செய்தித்தாளான பெர்லிங்ஸ்கே கேட்டபோது, இந்த விதி "அமல்பாட்டில் உள்ளது" என்று டென்மார்க் பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தியது.
கிரீன்லாந்தை கைப்பற்ற முயற்சிக்கும் ட்ரம்ப்
நேட்டோ பிரதேசமான கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது முயற்சியை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், ஆர்க்டிக் தீவை கையகப்படுத்தும் தனது இலக்கை அடைய அமெரிக்கா பரிசீலித்து வரும் விருப்பங்களில் "ராணுவப் படை"யும் ஒன்று என்று அவர் ஏற்கனவே கூறியுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், "கிரீன்லாந்தை கையகப்படுத்துவது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முன்னுரிமை என்பதை அதிபர் ட்ரம்ப் நன்கு அறிந்திருக்கிறார். மேலும், ஆர்க்டிக் பிராந்தியத்தில் நமது எதிரிகளைத் தடுப்பது மிக முக்கியம். இந்த முக்கியமான வெளியுறவுக் கொள்கை இலக்கைத் தொடர, அதிபரும் அவரது குழுவும் பல்வேறு விருப்பங்களைப் பற்றி விவாதித்து வருகின்றனர். மேலும், அமெரிக்க ராணுவத்தை பயன்படுத்துவது எப்போதும் தலைமைத் தளபதியின் வசம் உள்ள ஒரு விருப்பமாகும்" என்று கூறியுள்ளார்.
கிரீன்லாந்து அதிகாரிகளை சந்திக்கும் மார்கோ ரூபியோ
இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ அடுத்த வாரம் டேனிஷ் மற்றும் கிரீன்லாந்து அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். ட்ரம்ப் தீவை வாங்க விரும்புகிறார் என்றும், ராணுவ பலத்தை பயன்படுத்த விரும்பவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சூழலில், அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்பை "தேவையான உரையாடல்" என்று டென்மார்க் வரவேற்றுள்ளது.
அமெரிக்க துணை அதிபர் கூறியது என்ன.?
கிரீன்லாந்தை பாதுகாப்பதில் டென்மார்க் "வெளிப்படையாக" சரியான வேலையைச் செய்யவில்லை என்றும், ஆர்க்டிக்கில் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்க ட்ரம்ப் "எந்த அளவிற்கும் செல்லத் தயாராக இருக்கிறார்" என்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பை எச்சரித்த ஐரோப்பிய தலைவர்கள்
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, ஐரோப்பிய தலைவர்கள் வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில், ட்ரம்ப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்கின் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
டென்மார்க் தீவு "விற்பனைக்கு இல்லை" என்று பலமுறை வலியுறுத்தியுள்ளது. இருந்த போதிலும், அதை மீறி ட்ரம்ப் தற்போது எடுத்துவரும் முயற்சிகளை அடுத்து, டென்மார்க் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.





















