Crime: தகாத உறவில் மும்முரம்.. சேர்ந்து போட்ட ஐடியா.. மனைவியை கொடூரமாக கொன்ற நபர், காதலியுடன் கைது
ராஜசேகர் தேவியை சமாதானப்படுத்தும் நோக்கில் அரண்மனையூருக்கு வந்து தன்னுடன் குடும்பம் நடத்துமாறு அழைத்த நிலையில், தேவி அவருடன் செல்லவில்லை என கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மனைவியை கொன்ற நபர் காதலியுடன் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பூத்தாம் பட்டியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் பந்தல் அமைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவியும், சஞ்சீவி, தீனா, ஹர்சன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். இவர்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக கொண்டிருந்த நிலையில் மாத்தினிபட்டியைச் சேர்ந்த கணவரை இழந்த பெண்ணான சரோஜா என்பவருடன் ராகசேகருக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.
இதனையறிந்த தேவி கணவர் ராஜசேகரிடம் சரோஜாவுடனான உறவை கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து ராஜசேகர் சரோஜாவுடன் உறவை வளர்க்கவே, இதனை கைவிடுமாறு பலமுறை தேவி வலியுறுத்தியுள்ளார். இதைக் கேட்காமல் அடிக்கடி சரோஜாவை ராஜசேகர் சந்தித்து வந்துள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் கடந்த மாதம் ஏற்பட்ட தகராறில் கணவருடன் சண்டைப் போட்டுக் கொண்டு தேவி தன் 3 மகன்களையும் அழைத்துக் கொண்டு அரண்மனையூரில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
பின்னர் ராஜசேகர் தேவியை சமாதானப்படுத்தும் நோக்கில் அரண்மனையூருக்கு வந்து தன்னுடன் குடும்பம் நடத்துமாறு அழைத்த நிலையில், தேவி அவருடன் செல்லவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் (நவம்பர் 28 ஆம் தேதி) அரண்மனையூருக்கு மீண்டும் ராஜசேகர் தேவியை அழைத்து வரலாம் என சென்றுள்ளார். அப்போது தேவியின் தாயார் தங்கம் தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். 3 குழந்தைகளும் தூங்கி கோண்டிருந்துள்ளனர்.
அப்போது குடும்பம் நடத்த வருமாறு தேவியை ராஜசேகர் அழைக்க, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராகசேகர், தேவியின் தலைமுடியை பிடித்து இழுத்து ஜன்னல் கம்பியில் முகத்தை ஓங்கி அடித்துள்ளார். பின்னர் தலையை சுவற்றில் மோதியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்த தேவியை தொடந்து ஆத்திரம் தீராமல் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பியோடி தனது கள்ளக்காதலி சரோஜாவோடு தலைமறைவாகியுள்ளார்.
இந்த கொலை சம்பபம் குறித்து எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் உடலை கைப்பற்றியதோடு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ராஜசேகரையும், சரோஜாவையும் தீவிரமாக தேடி வந்தனர். இதில் இருவரும் திருச்சி அருகே பதுங்கியிருப்பது தெரிய வந்ததையடுத்து போலீசார் அங்கு சென்று ராஜசேகரையும், சரோஜாவையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் ராஜசேகர், என்னுடைய மனைவி தேவி உயிரோடு இருந்தால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார் என அடிக்கடி சரோஜா கூறி வந்தார். அவரை கொலை செய்து விட்டால் சந்தோஷமாக இருக்கலாம் எனவும் யோசனை சொன்னார். இதனால் தேவியை கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என போலீசாரிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.