’தடுப்பூசி செலுத்தி கொண்டால் வெட் கிரைண்டர் பரிசு’- அதிரடி காட்டும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள்...!
’’முதல் பரிசாக வெட் கிரைண்டர், இரண்டாம் பரிசாக மிக்சியும் வழங்க ஊராட்சி மன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது’’
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று ஏற்பாடு செய்துள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் 35 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் முழுவதும் இன்று 410 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 67 ஆயிரத்து 393 நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. அதில் முதல் தவணையாக 4 லட்சத்து 33 ஆயிரத்து 217 நபர்களுக்கு தடுப்பூசிகளும், இரண்டாம் தவணையாக 1 லட்சத்து 34 ஆயிரத்து 176 நபர்களுக்கு தடுப்பூசிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 9,039 நபர்களுக்கு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். அரசின் உத்தரவின்படி தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் ஊராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத விடுபட்ட நபர்கள் தடுப்பு ஊசி செலுத்தி பயன்பெறும் வகையில் மெகாதடுப்பூசி முகாம் தேனி மாவட்டம் முழுவதும் 410 இடங்களில் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்த தடுப்பூசி முகாம்களில் பங்ககேற்கும் பொதுமக்களை கவரும் வகையிலும், 100 சதவீத தடுப்பூசி செலுத்தவேண்டுமென்ற நோக்கில் பல்வேறு பரிசு திட்டங்களை பெரியகுளம் அருகே உள்ள திருமலைநாயக்கன்பட்டி பேருராட்சி நிர்வாகம் அறிவித்தது. தடுப்பூசி முகாம்க்கு முதலில் வரும் 100 நபர்களுக்கு உணவு கொண்டு செல்லும் டிபன் பாக்ஸ் மற்றும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய 600 நபர்கள், இன்று தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்கள் என அனைவரையும் ஒன்று சேர்த்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு முதல் பரிசாக வெட் கிரைண்டர், இரண்டாம் பரிசாக மிக்சியும் வழங்க ஊராட்சி மன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே போல் கம்பம் அருகே உள்ள கூடலூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முதலில் வரும் 20 நபர்களுக்கு குக்கர் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 1225 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. மாவட்டத்தில் கொரோனா எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் சுகாதாரத் துறையினர் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தினமும் கிராமங்கள்தோறும் சுகாதார பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள் மூலம் தடுப்பூசிகள் போடப்படுகிறது. சிலர் இன்னும் தடுப்பூசி போடாமல் காலம் கடத்தி வருகின்றனர். இதை தடுப்பதற்காக போலியோ முகாம் போன்று இன்று சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 1225 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
இதில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், போட்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மொபைல் போன் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இதேபோல ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும், ஒவ்வொரு ஊராட்சிகளிலும் மொபைல் போன் மின்சார அடுப்பு பட்டன் போன் உட்பட பல சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் தடுப்பூசி முகாம்கள் களைகட்டியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X