விஜய் தமிழக வெற்றிக்கழக மாநாடு: கடைசி நிமிட பரபரப்பு! கேரளாவின் உதவி, டாஸ்மாக் அறிவிப்பு பின்வாங்கியது ஏன்?
கேரளாவிலிருந்து 50 ஆயிரம் நாற்காலிகள்கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்மூலம் தவெக மாநாட்டுக்கு கேரளாவும் கைகொடுத்துள்ளது. இது தொண்டர்கள் இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியான பாரபத்தியில் நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த மாநாடானது, நாளை பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி இரவு 7.25 மணி வரை நடக்க இருக்கிறது.
இதற்காக 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, மாநாட்டுக்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, மாநாட்டு மேடை, இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மீதம் உள்ள பணிகளை ஏற்பாட்டு குழுவினர் இரவு, பகலாக செய்து வருகின்றனர். மேடையில் இருந்து விஜய், தொண்டர்களை நடந்து சென்று சந்திக்க 300 மீட்டர் நீளத்தில் ரேம்ப் வாக் நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், கலை நிகழ்ச்சிகள், உறுதி மொழி ஏற்பு, கொள்கை விளக்க பாடல், தீர்மானம் நிறைவேற்றம் ஆகியவற்றை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பேசுகிறார். தொண்டர்கள் பெரும் அளவில் பங்கேற்பார்கள் என்பதால், அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தவெக மாநாட்டிற்கு இருக்கைகள் தர முடியாது என ஒப்பந்ததாரர்கள் கூறியதால் கேரளாவிலிருந்து நாற்காலிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. தவெக மாநாட்டில் 1.5 லட்சம் இருக்கைகள் போட திட்டமிடப்பட்டு 5 நபர்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் 4 பேர் கடைசி நேரத்தில் இருக்கைகள் தர முடியாது என்று கூறியநிலையில், கேரளாவிலிருந்து 50 ஆயிரம் நாற்காலிகள்கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்மூலம் தவெக மாநாட்டுக்கு கேரளாவும் கைகொடுத்துள்ளது. இது தொண்டர்கள் இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் நாளைய தேதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் மாநில மாநாட்டை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பு திரும்ப பெறபட்டது. திருப்பரங்குன்றம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள டாஸ்மாக் கடைகள் மாநாடு நடைபெறும் நாளில் மூட, மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் பிறப்பித்த சில மணி நேரங்களிலேயே அந்த அறிவிப்பு திரும்ப பெறபட்டு, வழக்கம் போல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி முதலில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உத்தரவிட்டதாகவும், பிறகு மாநாடு அமைதியாக நடைபெறும் என்பதை கருத்தில் கொண்டு அறிவிப்பு திரும்ப பெறப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாக வட்டாரங்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.





















