வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி! திண்டுக்கல் அருகே பரபரப்பு - என்ன நடந்தது?
திண்டுக்கல் அருகே வந்தே பாரத் ரயிலின் ஏ.சியில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது.

வந்தே பாரத் ரயிலில் இன்று திடீரென புகை வந்ததால் பரபரப்பு எற்பட்டது. திண்டுக்கல் அருகே வந்தே பாரத் ரயிலின் ஏ.சியில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் நடுவழியில் வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் ஒரு அதிவேக ரயில் சேவையாகும். இது "Train 18" என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டு, 2019-ல் முதல் முறையாக இயக்கத்துக்கு வந்தது. இந்தியாவில் முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட இந்த ரயில், "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. வந்தே பாரத் ரயில்களில் பயணிகளுக்கக தரமான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இது முழுவதுமாக ஏர் கண்டிஷன்ட் கொண்டது. வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டவை.
இந்த நிலையில், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு பொதுமக்கள் இடையே, நல்ல வரவேற்பு உள்ளது. திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இன்று காலை வழக்கம் போல் வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த ரயில் திண்டுக்கல் அருகே வந்த போது வேல்வார்கோட்டை அருகே திடீரென ரயிலின் ஒரு பெட்டியில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். மேலும், ஆபத்தை உணர்ந்த பயணிகள் ரயிலின் அபாய சங்கிலி பிடித்து இழுத்தனர். ஏ.சி.யில் இருந்து புகை கிளம்பியதால் வடமதுரை அருகே வேல்வார்கோட்டை என்ற இடத்தில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து வந்த ரயில் ஓட்டுநர் மற்றும் ரயில்வே கார்டு ஆகியோர் சம்பந்தப்பட்ட பெட்டியில் சோதனை செய்தனர். இதில், ஏசியில் ஏற்பட்ட கோளாறால் கரும் புகை வெளியேறியது தெரியவந்தது. இதையடுத்து, ஏசியில் ஏற்பட்ட கோளாறை தொழில்நுட்ப நிபுணர்கள் பழுதை சரி செய்தனர்.

அரை மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டு, அதன் பிறகு வந்தே பாரத் ரயில் கிளம்பியது. வந்தே பாரத் ரயில் நடுவழியில் நின்றதால் அந்த வழியாக செல்லக்கூடிய மற்ற ரயில்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த ரயில்களும் பாதி வழியில் நிறுத்தப்பட்டன. உடனடியாக, புகை வந்த பகுதியில் இருந்த பயணிகள் மாற்றுப் பெட்டிக்கு மாற்றப்பட்டுள்ளனர். முழுவதும் ஏசி வசதி கொண்ட ரயில் என்பதால் கண்ணாடிகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் இருப்பதால் பயணிகள் பத்திரமாக மாற்ற கம்பார்ட்மென்ட்க்கு மாற்றப்பட்டனர். ஏ.சியில் பழுது நீக்கப்பட்ட பிறகு பாதுகாப்பு கருதி பின்னர் ரயிலின் வேகத்தை அதன் ஒட்டுநர்கள் குறைத்து திருச்சிக்கு கொண்டு சென்றனர். வந்தே பாரத் ரயிலில் திடீரென இன்று கரும் புகை வெளியேறிய சம்பவம் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.





















