கீழடி : அகழ்வாராய்ச்சி பணிகளைப் பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் !
கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று பார்வையிட்டார்.
கீழடி' என்கிற ஒற்றைச் சொல், தமிழ்நாடு மக்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்டு வரும் கீழடியில் கடந்த 2015 -ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு இந்த ஆய்வைத் தொடங்கியது. கீழடியில் தொன்மையான மனிதர்கள் ஏராளமானோர் கூடி வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது. தற்போது கீழடியில் தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பாக 7-ம் அகழாய்வுப் பணி நடைபெற்று நிறைவடைந்துள்ளது. கீழடி, கொந்தகை அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி 13-ம் தேதி துவங்கி செப்டம்பர் வரை தொல்லியல் ஆய்வு செய்யப்பட்டது.
கீழடியில் கண்டறியப்பட்ட தொல் பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில், சுமார் ரூ.12 கோடியில் கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதுதவிர கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் என அகழாய்வு நடந்த இடங்களில் குழிகளை மூடாமல் அப்படியே பொதுமக்கள் பார்க்கும் வகையில் திறந்தவெளி அகழ் வைப்பகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இன்று கீழடியில் அகழாய்வு செய்த இடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து அகழாய்வுப் பணியின் போது எடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். உடன் அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், ஐ.பெரியசாமி,கீதா ஜீவன்,மூர்த்தி,அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க: ‛ஒரு நியாயம் வேணாமா...’ சென்னை இடத்திற்கு கொடைக்கானலில் பத்திரப் பதிவு: 3 பேர் கைது!