‛ஒரு நியாயம் வேணாமா...’ சென்னை இடத்திற்கு கொடைக்கானலில் பத்திரப் பதிவு: 3 பேர் கைது!
சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள காலி இடத்தை ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணம் தயாரித்து கொடைக்கானலில் பத்திரம் பதிவு செய்ய முயன்ற பெண் உட்பட 3 பேர் கைது.
சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள 279 /1 A36 சர்வே நம்பரில் மனை எண் 4, 2400 சதுரடி உள்ள காலி மனை இடத்தை, நாராயண சாமி என்பவரின் மகன் ராமசாமி என்பவர் பெயரில் 1971 ஆம் ஆண்வு வாங்கியுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாசாலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 13.10.2021 புதன் கிழமை அன்று ராமசாமி என்பவர் கொடைக்கானல் டோபிகானால் பகுதியில் வசித்து வருவதாகவும் தற்போது தனக்கு சொந்தமான இடமான சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள 279 /1 A36 சர்வே நம்பரில் மனை எண் 4, 2400 சதுரடி உள்ள காலி மனை இடத்தை மதுரையை சேர்ந்த ராம்குமார் என்பவருக்கு பவர் வழங்குவதாக கூறி ஆவணத்தை சார்பதிவாளர் ராஜேஷ் குமாரிடம் தாக்கல் செய்துள்ளார்,
அப்போது இந்த ஆவணத்தில் ஆவணம் தயாரிப்பாளர் கையொப்பம்,சாட்சிகளின் முகவரி உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்து வருமாறும் திரும்பி கொடுத்துள்ளார்,அப்போது அவருடன் வந்த கொடைக்கானல் டோபிகானால் பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் நான் நுகர்வோர் கோர்ட் நீதிபதி என்றும் அடையாள அட்டை காண்பித்ததாக கூறப்படுகிறது. மேலும் நான் ஒரு வழக்கறிஞரிடம் கையொப்பம் வாங்கி வந்தால் போதுமா என்று கேட்டுள்ளார் அதற்கு சார்பதிவாளர் அலுவலகம் முடிவடையும் நேரத்திற்குள் வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஆவணங்களில் உள்ள அனைத்து குறைகளையும் பூர்த்தி செய்ததாகவும்,ஆவண எழுத்தாளரிடம் கையொப்பம் பெற்றுவிட்டதாகவும் சிறிது நேரத்தில் மீண்டும் வந்து சார்பதிவாளர் அலுவலத்தில் தாக்கல் செய்துள்ளனர், இதனை பெற்று கொண்ட சார்பதிவாளர் சம்பந்தப்பட்ட இடம் வெளிமாவட்டம் மற்றும் வேறு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கட்டுப்பாட்டில் இருப்பதால் சொத்து தொடர்பான வில்லங்கச்சான்று வேறு ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட அலுவகத்திற்கு இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பட்டதாக கூறப்படுகிறது, இந்நிலையில் இரண்டு நாட்கள் களித்து 15.10.2021 வெள்ளிக்கிழமை அன்று மர்மநபர் ஒருவர் சார்பதிவாளருக்கு தொலைபேசியை தொடர்பு கொண்டு கடந்த புதன்கிழமை சென்னை சொத்து தொடர்பாக ஒரு ஆவணம் பதிவு செய்து நிலுவையாக வைத்துள்ளீர்கள்
அந்த ஆவணம் சம்மந்தப்பட்ட நபர்கள் அனைவரும் போலியானவர்கள் எனவும் ஏற்கனவே இது போன்று சென்னையில் பத்திரம் பதிவு செய்து தப்பித்து விட்டார்கள் என்று கூறியுள்ளார். மேலும் தஞ்சாவூரில் இதே போன்று சார்பதிவாளரின் நடவடிக்கையால் சிறைக்கு சென்றதாகவும்,அவர்களை நம்பவேண்டாம் எனவும் கூறியுள்ளார். நீங்கள் யார் என்று கேட்டதற்கு நான் சென்னை ஆவண எழுத்தாளர் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டதாகவும், பிறகு மீண்டும் தொடர்பு கொண்ட அந்த மர்மநபர் இவர்களால் நான் பாதிக்கப்பட்டுளேன் வேண்டுமென்றால் அதற்கு ஆதாரங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கின்றேன் என்று கூறி ஆதாரங்களை அனுப்பிவைத்துள்ளார்.
இதில் தூத்துக்குடியில் பத்திர பதிவு செய்ய முயன்று தப்பியதில் ரவி பந்த் என்பவரின் அடையாள அட்டை இடம்பெற்றுள்ளது. இந்த அட்டையில் உள்ள புகைப்படமும் கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவகத்தில் ராமசாமி என்பவர் கையொப்பம் மிட்ட நபரின் புகைப்படமும் ஒரே மாதிரி உள்ளதை உறுதி செய்யப்பட்டதாக சார்பதிவாளர் தெரிந்துகொண்டார். இந்நிலையில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த ராம்குமார்மற்றும் நுகர்வோர் கோர்ட் நீதிபதி என்று கூறிய ராஜலட்சுமி உள்ளிட்ட இருவர் சார்பதிவாளர் அலுவகத்திற்கு வந்து கடந்த புதன்கிழமை பதிவு செய்த ஆவணத்தை திரும்பி வழங்குமாறும் ,எனது தாத்தா ராமசாமி கடிதம் எழுதி கொடுத்து விட்டு ஆவணத்தை பெற்றுவர சொல்லியதாக ஒரு கடிதத்தை ராஜலட்சுமி சார்பதிவாளரிடம் கொடுத்துள்ளார். இதனை பெற்று கொண்ட சார்பதிவாளர், ராம்குமார் என்பவரிடம் உங்கள் உண்மையான தாத்தா பெயர் மற்றும் நீங்கள் ஏற்கனவே வேறு சார்பதிவாளர் அலுவகத்தில் ரவிபந்த் என்ற பெயரில் ஆவணம் பதிவு செய்ய முயன்றதும், கொடைக்கானல் முகவரி ஆகியவை போலி என்றும்,தனக்கு வாட்ஸ் அப் மூலம் ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் சார்பதிவாளர் தெரிவித்துள்ளார். இதனால் சுதாரித்து கொண்ட ராஜலட்சுமி தான் செய்தது தவறு என்றும், தாங்கள் தெரியாமல் செய்து விட்டோம் என்றும்,என் மீது மட்டும் நடவடிக்கை எடுக்குமாறும் கூட வந்தவர்களை விட்டுவிட சொல்லி ராஜலட்சுமி சார்பதிவாளரிடம் கேட்டுக்கொண்டார்,
இதனையடுத்து சார்பதிவாளர் சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள இடத்தினை போலியாக ஆவணம் தயாரித்து ஆள்மாறாட்டம் செய்து அலுவலகத்திற்கு வந்த ராம்குமார்,ராஜலட்சுமி மற்றும் அவருடன் உறுதுணையாக இருந்த தஞ்சாவூரை சேர்ந்த ரமேஷ் (51) உள்ளிட்ட மூவரை பிடித்து அருகில் இருந்த கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததுடன் போலியாக ஆவணம் தயாரித்த பத்திரங்கள்,சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கொடைக்கானல் மகளிர் காவல் ஆய்வாளர் இந்த மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர். மேலும் இடத்தின் உரிமையாளர் போன்று நாடகமாடி கையொப்பம் மிட்ட அடையாள தெரியாத நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.