TM Soundararajan Statue: டி.எம்.சௌந்திரராஜன் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
TM Soundararajan Statue: பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் திருவுருவ வெங்கல சிலையினை மதுரை முனிச்சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பிரபல பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜனின் திருவுருவ வெங்கல சிலையினை மதுரை முனிச்சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திரையுலக பயணம்:
மதுரையில் 1922-ல் பிறந்த டி.எம்.செளந்தரராஜன் காரைக்குடி ராஜாமணி என்பவரிடம் இசைப்பயிற்சி பெற்றவர். மேடை கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்தவர். தனது 24வது வயதில் 1950ம் ஆண்டு கிருஷ்ணவிஜயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் பின்னணி பாடகராக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில், பக்தி பாடல்கள் உட்பட 10,000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.
தமிழில் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்டோரின் படங்களில் அதிகமான பாடல்கள் பாடியவர், நடிகர்களின் குரல்களுக்கு ஏற்றவாறு தனது குரலை மாற்றி பாடக்கூடிய திறமை படைத்தவர். அருணகிரிநாதர், பட்டினத்தார் ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார். 65 ஆண்டுகள் இந்திய திரையுலகில் தனிச்சிறப்பு வாய்ந்த பின்னணி பாடகராக வலம் வந்தவர் பத்ம ஶ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
சிலை திறப்பு
டி.எம்.சவுந்திரராஜனுக்கு மதுரையில் சிலை அமைக்கப்படும் என 2023 ஏப்ரல் 11 அன்று தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் இந்த அறிவிப்பு வெளியானது.
அதன்படி, முனிச்சாலை அருகே மாநகராட்சியின் பழைய மண்டல அலுவலக வளாகத்தில், ரூ.50 லட்சம் மதிப்பில் 450 கிலோ எடையில் 7 அடி உயரத்திற்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, மு.பெ.சாமிநாதன், எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.