திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு! பயணிகளின் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன?
மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கள்கிழமைதோறும் மாலை 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை, பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.
ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் தெற்கு ரயில்வேயில் சேலம் ரயில்வே கோட்டம், கூட்டநெரிசல் மிக்க ரயில்வே வழித்தடங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், சேலம் கோட்டத்திலிருந்து வாரம் ஒருமுறை அல்லது வாரத்திற்கு இருமுறை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், பயணிகளின் பயன்பாட்டை கருத்தில்கொண்டு, பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில் சேவை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டும் வருகிறது.

அந்த வகையில், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06030), ஞாயிற்றுக்கிழமை தோறும் திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும். அதே ரயில், மறுமார்க்கமாக மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயிலாக (06029), மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கள்கிழமைதோறும் மாலை 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில்கள் சேரன் மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலையாச்சிப்பேட்டை, கோயம்புத்தூர், பொள்ளாச்சிப்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த ரயிலில் ஏசி 2-அடுக்கு, ஏசி 3-அடுக்கு, படுக்கை வகுப்பு, முன்பதிவு இல்லாத வகுப்புகளும் உள்ளன.
இந்நிலையில், இந்த சிறப்பு ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனை ஏற்று, வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வரை, திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பால் கோவை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இதேபோன்று கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் ரயில்கள் இயக்க வேண்டும் என்பதும் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.





















