மதுரை அரசாளும் மீனாட்சிக்கு விமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்..
மீனாட்சி திருக்கல்யணத்தின்போது திருமண நிகழ்ச்சியை காண வந்திருந்த மணமான பெண்கள், தங்கள் கழுத்தில் உள்ள தாலியை மாற்றி புதுத்தாலி அணிந்து கொண்டனர்.
சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வடக்கு ஆடி- மேல ஆடி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மேடையானது நறுமணம் மிக்க வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மேடையில் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சமேதராகவும், மீனாட்சியம்மனின் வலதுபுறம் பவளக்கனிவாய் பெருமாளும், சுந்தரேசுவரரின் இடப்புறத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடனும் தனி தனி வாகனங்களில் மேடையில் எழுந்தருளினர்.
திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக 5 டன் வண்ண மலர்களால் குறிப்பாக மதுரை மல்லிகை மற்றும் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஸ்ரீரங்கம், பெங்களூர், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாசனை மிகுந்த வண்ண மலர்கள் கொண்டும், மேலும் 500 கிலோ பழங்கள் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளி, தானியங்களால் செய்யப்பட்ட பெயர்ப்பலகைகளால் திருக்கல்யாண மேடை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சரியாக 8.35 மணியில் இருந்து 8.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில், இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் தங்கை மீனாட்சியை சொக்கநாத பெருமானுக்கு பவளக்கனிவாய் பெருமாள் தாரை வார்த்து கொடுத்தார்.
பாண்டிய மன்னனாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையோடு கலந்து கொண்டார். மணப்பெண் மீனாட்சியம்மனுக்கு முத்துக்கொண்டை போட்டு தங்ககீரிடம், மாணிக்க மூக்குத்தி, தங்ககாசு மாலை, பச்சைக்கல் பதக்கம் விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டும், மணமகனான சுந்தரேஸ்வரர் பட்டு வஸ்திரத்தில் எழுந்தருளி பவளங்கள் பதித்த கல்யாண கீரிடம், வைரம் பதித்த மாலைகள் அணிவிக்கப்பட்டன.
மீனாட்சி திருக்கல்யணத்தின்போது திருமண நிகழ்ச்சியை காண வந்திருந்த மணமான பெண்கள், தங்கள் கழுத்தில் உள்ள தாலியை மாற்றி புதுத்தாலி அணிந்து கொண்டனர். இந்த திருக்கல்யாண நிகழ்வை கோயிலுக்குள் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசித்தனர். மீனாட்சியம்மான் திருக்கல்யாணத்தையொட்டி சுமார் 1 லட்சம் பேருக்கு திருக்கல்யாண விருந்து மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபவத்தால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மதுரையில் உள்ள அனைவரும் தங்களது வீட்டு திருமணம் போன்று மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பார்த்து சாமி் தரிசனம் செய்து விருந்து உண்டு , மொய் எழுதும் பழக்கம் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இன்று இரவு ஆனந்தராயர் புஷ்ப பல்லக்கில் மீனாட்சியம்மனும், யானை வாகனத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையும் எழுந்தருள உள்ளனர். விழாவின் பாதுகாப்பிற்காக 3 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டன.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்