தேனி: தமிழக ஆளுநர் மேடையில் சீரியஸாக பேசியபோது தூங்கிய மக்கள்..
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சியினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு. ஆளுநர் பேசுகையில் தூக்கத்தில் வழிந்த மக்கள்..
ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சிகள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.தேனி மாவட்டத்தில் நடைபெறும் தனியார் பள்ளி மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிலைய கருத்தரங்கு நிகழ்வில் பங்கேற்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வருகை தந்தார். இந்த நிலையில் தமிழக ஆட்சிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து இடையூறு செய்வதாகவும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலம் மத்திய பாஜக அரசு முட்டுக்கட்டை போடுவதாக கூறி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் திமுக , காங்கிரஸ், கம்யூனிஸ்டு , மதிமுக, திக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்.
இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் தனியார் (சென்டெக்ட்) வேளாண் அறிவியல் மையத்தில் மாநில அளவிலான பெண் விவசாயிகள் தொழில் முனைவோர் சுய உதவிக்குழு அமைப்புகள் மற்றும் மா உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் முன்னதாக மதிப்புக் கூட்டப்பட்ட விவசாய பொருட்கள் கண்காட்சியினை பார்வையிட்டார்.
வெற்றி பெற்ற பெண் தொழில் முனைவோர்கள் தங்களின் வெற்றிக்கான வழிமுறைகள் குறித்து பேசினார்கள். அதனைத் தொடரந்து மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற மகளிர் குழுக்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கி மா சாகுபடி வாழை சாகுபடி குறித்த புத்தகங்களை வெளியிட்டார். அதன் பின் பேசத்தொடங்கிய ஆளுநர் வேளாண்மை பற்றியும் வேளாண்மைக்காக மத்திய அரசு செய்து வரும் நலத்திட்டங்கள் பற்றியும்,
குறிப்பாக பெண்களுக்கான பல்வேறு சலுகைகளை அரசுகள் செய்து வருவதும், தொழில் முனைவோர் ஆக்குவதற்கான பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்து பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க சின்னமனூர் மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் குறிப்பாக பெண்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
ஆளுநர் வருகைக்காக காலை 9 மணி முதல் மதியம் வரையில் 2 மணி வரையில் காத்திருந்த மக்கள் ஆளுநர் வந்து மேடையில் பேசத்தொடங்கியதும், பெரும்பாலானோர் தூக்கத்தில் ஆழ்ந்தனர். ஆளுநர் பேசும் மேடையின் முன் இருக்கையில் இருந்தவர்களே தூக்கத்தில் ஆழ்ந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற நிகழ்ச்சி முடிந்த ஆளுநர் சென்ற நிலையில் பெரு மூச்சுட்டு விட்டு கூட்டத்திற்கு வந்தவர்கள் கலைந்தனர்.