தேனி : சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு..
சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் 7 மதகுகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. சென்ற சில நாட்களாக மழை பெய்ததன் காரணமாக அணையில் தொடர்ந்து போதுமான அளவில் தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் இந்த ஆண்டு முதல்போக பாசனத்திற்காக வருகிற ஜூன் 2-ஆம் தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக அங்கு உள்ள கண்மாய்களில் தண்ணீரை நிரப்பி வைக்கும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
Ganesh Acharya : "98 கிலோ எடையை குறைச்சேன்.. இப்போ.." : "ஊம் சொல்றியா” புகழ் கணேஷ் ஆச்சார்யா பளிச்..
இதை தமிழக அரசு ஏற்று அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. தண்ணீர் திறப்பு அதன்பேரில் இன்று வைகை அணையில் இருந்து 7 பிரதான மதகுகள் மூலம் ஆற்றுப்படுகை வழியாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன் தலைமையிலான அதிகாரிகள் தண்ணீரை திறந்து வைத்து, அணையில் பூக்களை தூவினர். இந்த நிகழ்ச்சியில் வைகை அணை உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் குபேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அணையில் இருந்து இன்று முதல் வருகிற 9-ந்தேதி வரை 2 கட்டமாக மொத்தம் 849 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டம் வைகை பூர்வீக பாசன பகுதிகளில உள்ள மொத்தம் 118 கண்மாய்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இதன்மூலம் அந்த கண்மாய்களை சுற்றியுள்ள சுமார் 47 ஆயிரத்து 929 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதுதவிர வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளில் தண்ணீர் பெருகும் வகையில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்