’’ஊரு ஒன்னுதான் ஆனா பேரு மூணு’’...! - இந்த ஊர்காரங்களுக்கு இப்படி ஒரு சோதனையா...!
’’நாங்கள் இது தொடர்பாக பலமுறை அரசுக்கு மனு அளித்துள்ளோம். இந்த ஊரைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவரும் அரசுக்கு 200க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்துள்ளார் இருந்தும் 36 ஆண்டுகளாக பலனில்லை’’
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட க. விலக்கு அருகில் திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ’’அன்னை இந்திரா நகர் என்ற ஊர்’’ அமைந்துள்ளது. கடந்த 1970ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழ் மக்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்கி அவர்களை இங்கு மறுகுடி அமர்த்தியது தமிழ்நாடு அரசு.
அன்னை இந்திரா நகர் என்ற பெயர் தொடக்கத்தில் இருந்தே இருந்தாலும், சிலோன் காலனி, இலங்கை அகதிகள் முகாம் ஆகிய பெயர்களும் அரசு ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது. ஒரே ஊருக்கு மூன்று வெவ்வேறு பெயர்கள் இருப்பதால், பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதாக கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.
அரசு சார்பில் ஊராட்சி தொடர்பான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் போது சிலோன் காலனி என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் இங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு மின் இணைப்பு உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்திலும் அன்னை இந்திரா நகர் என்றே உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் வேறு அரசு சார்ந்த ஏதேனும் ஒரு பணியை மேற்கொள்ளும்போது ஊர் பெயர் மாற்றம் உள்ளதால், பல சலுகைகளும் பல திட்டங்களை பெற முடியாமலும் தவித்து வருவதாக வேதனையுடன் கூறுகின்றனர்.
அதே நேரத்தில் இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மட்டும் இலங்கை அகதிகள் முகாம் என்ற பெயரில் ஊர் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் தாயகம் திரும்பியோர் என்று அழைக்கப்படும் நிலையில், பள்ளியின் முகவரி மற்றும் பள்ளி தொடர்பான ஆவணங்களில் மட்டும் இலங்கை அகதிகள் முகாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மேல் படிப்பு படிப்பதற்கும் வேலைவாய்ப்பு சம்பந்தமாக வெளியூர்களுக்கு செல்லும்போதும், தாங்கள் அகதிகள் என நினைத்து பல்வேறு இடங்களில் ஒதுக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர் அப்பகுதி பள்ளி மாணவ மாணவிகள்.
இதனால் தாங்கள் அகதிகள் இல்லை என்ற சான்றிதழ் பெற கிராம நிர்வாக அலுவலகத்தை நோக்கி அலையும் நிலைமை உள்ளதாக கூறுகின்றனர். கடந்த 1985ஆம் ஆண்டு இந்தப் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்ட போது இலங்கை அகதிகள் முகாம் என்று குறிப்பிடப்பட்டது. அப்போது இருந்தே இந்த பிழையை திருத்தம் செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சுமார் 36 ஆண்டுகளாக அரசுக்கு மனு அனுப்பியும் பெயரை திருத்த முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
இது குறித்து இப்பகுதி ஊர் மக்கள் சிலர் கூறுகையில், " நாங்கள் இது தொடர்பாக பலமுறை அரசுக்கு மனு அளித்துள்ளோம். இந்த ஊரைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவரும் அரசுக்கு 200க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்துள்ளார். பள்ளிக்கூடம் தொடங்கும் போது அகதிகள் முகாம் என்று பிழையாய் குறிப்பிடப்பட்டது. இதைத் திருத்த வேண்டும் என்று கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 200க்கும் மேற்பட்ட மனு அளித்து உள்ளோம். பலமுறை இந்த மனுக்கள் சென்னை தலைமை அலுவலகங்கள் வரை சென்றும் மேல் நடவடிக்கை இன்றி உள்ளது. பள்ளி ஆவணத்தில் இருக்கும் அகதிகள் முகாம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு அன்னை இந்திரா நகர் என்ற முகவரியில் தொடர்ந்தால் இனிவரும் காலங்களிலாவது இந்தப் பள்ளியில் படித்து வெளியேறும் மாணவிகளுக்கு தேவையற்ற அலைச்சலும் மன உளைச்சலும் ஏற்படாது. எனவே இந்த அரசு இந்தப் பிரச்சினையில் தனி கவனம் செலுத்த வேண்டும்" என அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர் இப்பகுதி மக்கள்.





















