Theni : தீவிரமடைந்துள்ள நெல் அறுவடை பணிகள், அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்ப்பார்ப்பு
கடந்த வாரம் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் 60 கிலோ (ஒரு மூட்டை) ரூ.1350-க்கு விற்பனையானது.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக இரு போகம் நெல் விவசாயம் செய்யக்கூடிய ஒரே மாவட்டம் தேனி மாவட்டம். தமிழகம், கேரள எல்லையை இணைக்கும் ஒரு முக்கிய மாவட்டமாக பார்க்கப்படுவதும் தேனி மாவட்டம். தேனி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விளங்குகிறது விவசாயம். இப்பகுதியில் நெல், தென்னை, திராட்சை, வாழை உள்ளிட்ட பயிர்களின் விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் காய்கறிகளின் உற்பத்தியும் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியின் விவசாயத்திற்கு உயிர்நாடியாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து பழனிசெட்டிபட்டிவரையில் சுமார் 14,707 ஏக்கர் பரப்பளவில் வருடத்திற்கு இரண்டு போகம் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடத்திலும் ஜூன் முதல் வாரத்தில் முதல் போக சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் ஈடுபடுவர். முதல் போக நெல் சாகுபடி முடிந்து தை முதல் வாரத்தில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கான பணிகள் தொடங்கப்பட்டு சித்திரை மாதம் இரண்டாம் போக நெல் அறுவடை பணிகள் முடியும். இந்த நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை செய்யப்படும் நெல் விவசாயத்தில் தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடியில் அறுவடை பணிகள் பல்வேறு பகுதிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களில் முல்லை பெரியாறு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையிலும், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின்மையாலும் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் முதல் போக நெல் சாகுபடிக்கான பணிகள் நடைபெறாமல் காலதாமதமாக நடந்தது. இதனால் இரண்டாம் போகம் நெல் சாகுபடி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. பருவ மழை , பருவ சூழல் , நெல் ரகங்கள் மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த இரண்டு வருடமாக இரண்டாவது போகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
ஆனால் இந்த வருடம் ஜூன் முதல் வாரத்திலேயே முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் இந்த வருடம் இரண்டு போகம் நெல் விவசாயம் செய்யப்பட்டது என விவசாயிகள் கூறுவதுடன் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். தற்போது கூடலூர் வெட்டுக்காடு, தாமரைக்குளம் பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது.
கப்பா மடை, ஒட்டாண்குளம், ஒழுகுவழி சாலை ஆகிய பகுதிகளில் நெல் கதிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. கடந்த வாரம் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் 60 கிலோ (ஒரு மூட்டை) ரூ.1350-க்கு விற்பனையானது. இதன் காரணமாக உள்ளூர் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்கின்றனர்.
மேலும் விற்பனை செய்த நெல் மூட்டைகளுக்கு தவணை முறையில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. போதிய அளவு இடவசதி இல்லாத விவசாயிகள் குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே அறுவடை பணிகள் தொடங்கி உள்ளதால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க கூடலூர் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.





















