தேனி, மதுரை, ராமநாதபுரத்தில் கனமழை! வைகை அணை நிரம்பி, கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
வைகை அணை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த இந்த 67 ஆண்டுகளில் 36 வது முறையாக நிரம்பி உள்ளது. முழு கொள்ளளவாக கருதப்படும் 69 அடியை தற்போது எட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பலத்த வலிமையுடன் பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக மாநிலம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கையே முடங்கியுள்ளது. மழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதுடன், ஊர்களுக்குள் மழைநீர் புகுந்து சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தென்காசி, தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் மழையின் அளவு அதிமாக பதிவாகி வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, ஆறுகள் மற்றும் அணைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சோத்துப்பாறை அணை நிரம்பி வழிகிறது. அங்கு கடந்த சில நாட்களாகக் கொட்டிய மழையால் அணையின் நீர்மட்டம் 126 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் வெள்ளநீரை வெளியேற்றி வருகின்றனர்.

நீர் வெளியேற்றம் காரணமாக கீழ்ப்பகுதி கிராமங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொது வேலைத் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் அணையை நேரடியாக பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மழை இன்னும் 2 நாட்கள் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அணையின் நிலைமையை கண்காணிக்க இரவு பகலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சோத்துப்பாறை அணைக்கு அருகிலுள்ள குடியிருப்புகள், விவசாய நிலங்கள், குறைந்தபட்சப் பகுதியில் உள்ள சாலைகள் ஆகிய இடங்களில் நீர் தேங்கியதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வாகனப் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மழை காரணமாக தேனி மாவட்டத்தின் வானதி ஆறு, வைகை ஆறு போன்றவை பெருக்கெடுத்து ஓடுகின்றன. தொடர் கனமழை காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தற்போது நிரம்பியுள்ளது. வைகை அணை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த இந்த 67 ஆண்டுகளில் 36 வது முறையாக நிரம்பி உள்ளது. முழு கொள்ளளவாக கருதப்படும் 69 அடியை தற்போது எட்டிய நிலையில் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் வைகை அணையின் பிரதான ஏழு மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட நிர்வாகிகளுக்கு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ள நிலையில், தற்போது வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது திறக்கப்படும் தண்ணீரின் அளவை படிப்படியாக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் கூடுதல் மழை பெய்யும் பட்சத்தில் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதால், வைகை ஆற்றில் சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் யாரும் இறங்க முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





















