கேரளா ஓணம் பண்டிகை எதிரொலி...! தேனியில் அதிரடியாக அறுவடை செய்யப்படும் ஆலைக்கரும்புகள்...!
கம்பம் பள்ளத்தாக்கில் விளைந்து அறுவடைக்கு தயாராகும் இருக்கும் ஆலைக் கரும்புகள் மூலம் தயாரிக்கும் வெள்ளத்திற்கு, கேரளாவில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் வருவதால் , ஆலைக் கரும்புகளின் அறுவடை அமோகம்
தமிழக-கேரள எல்லையை ஒட்டிய மாவட்டமான தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், வாழையாத்துப்பட்டி, பூதிப்புரம், ஆதிப்பட்டி, வளையபட்டி சின்னமனுார், உத்தமபாளையம் பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஆலைக் கரும்புகள் சாகுபடி நடைபெறுகிறது. ரோஸ் கரும்பு, புதுரகம் 19 உள்ளிட்ட ரக கரும்புகள் பயிரிடப்படுகின்றன. இந்த கரும்புகள் ஒரு ஏக்கருக்கு 40 டன் வரை விளையும் என்கின்றனர் விவசாயிகள். தேனி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பலரும், தாங்கள் பயிரிட்டுள்ள கரும்பினை அறுவடை செய்து, வைகை அணை அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு வெல்லம் தயாரிக்க அனுப்புகின்றனர்.
கரும்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் சர்க்கரை ஆலைகள், விவசாயிகளிடமிருந்து பெற்ற கரும்புக்கான உரிய தொகையை 14 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்பது அரசாணை. அரசு இது மாதிரியான கட்டுப்பாடுகள் விதித்தும் தனியார் கரும்பு ஆலை உரிய நேரத்தில் விலை கொடுப்பதில்லை என்கின்றனர் கரும்பு விவசாயிகள். இதுகுறித்து கரும்பு ஆலை ஊழியர்கள் சிலர் கூறுகையில், சந்தையில் சர்க்கரை விலை குறைந்து போதிய நிதி இல்லாமல் நிதிப்பற்றாக்குறை உள்ளதால் விவசாயிகளுக்கு பணம் கொடுக்க 14 நாட்கள் முதல் 20 நாட்கள் ஆகிறது. ஆனால் 20 நாட்களுக்குள்ளேயே நாங்கள் பணம் செலுத்தி விடுகிறோம் என்றனர்.
அதே நேரத்தில், சில விவசாயிகள், தங்களது தோட்டங்களில் விலையும் கரும்புகளை சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பாமல், தாங்களே தங்கள் தோட்டத்தில் விளையும் கரும்புகளை அறுவடை செய்து அதிலிருந்து வெல்லம் காய்ச்சி, அதனை அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். தேனி கரும்பு விவசாயிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் வெல்லம், பெரும்பாலும் கேரளாவிற்குதான் அனுப்பப்படும். கேரளாவில் வெல்லத்தின் தேவையைப் பொறுத்து விலையில் ஏற்ற, இறக்கம் ஏற்படும்.
கொரோனா ஊரடங்கிற்கு முன்னர் 42 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டையின் விலை ரூ. 2,000 விற்ற நிலையில், ஊரடங்கு நேரத்தில் அதன் விலை ரூபாய் 1,500 ஆக குறைந்தது. இதனால், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டதாலும் , கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தீவிரம் பெற்றுள்ளதாலும் கேரளாவில் இருந்து ஆர்டர்கள் வர ஆரம்பித்துள்ளது. இதனால் தற்போது விலையும், ரூபாய் 1,800 முதல் 2000 ரூபாய் வரை ஏற்றம் கண்டுள்ளது. இதனால் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் விளைந்துள்ள சர்க்கரை கரும்புகள் விரைவாக அறுவடை செய்யப்பட்டு, கேரளாவிற்கு ஏற்றுமதியாக தயார் நிலையில் உள்ளது.
இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், " முல்லைப் பெரியாற்றின் தண்ணீர் விரைவாக திறந்துவிடப்பட்டதாலும், போதிய மழைப்பொழிவு இந்த ஆண்டு இருந்ததாலும் கரும்பு விவசாயத்திற்கு பெருத்த பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இங்கு விளையும் கரும்புகள் பெரும்பாலும் கேரளாவிற்கு தான் அனுப்பப்படும். தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை வர உள்ளதால், கேரளா மாநிலத்தில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் வந்து வருகின்றன. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கரும்பு வெட்டும் வேலை ஆட்களை வைத்து கரும்பு அறுவடை செய்து வெள்ளம் தயாரித்து கேரளா மாநிலத்திற்கு அனுப்ப உள்ளோம். விலையும் சற்று ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலேயே உள்ளது" என்றனர் விவசாயிகள்.
''இந்த வேளாண் பட்ஜெட்ல எங்களுக்கு ஒன்னுமே இல்ல'' - புலம்பும் தென் மாவட்ட விவசாயிகள்!