உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் - பெரியகுளத்தில் நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, கிளை சிறைச்சாலை, மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் இதர பணிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். முதலமைச்சர் அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைவாக மக்களைச் சென்றடைய வேண்டும் என்றும், மக்களை நாடி, மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தில் அலுவலர்கள் களத்திற்கே வந்து செயல்படும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று பெரியகுளம் வட்டத்தில், நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பெரியகுளம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், பட்டா சிட்டா அடங்கல், நிலுவை மனுக்களின் முன்னேற்றம், பகிர்மான பதிவேடு, மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இதர பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டு, 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
மேலும், மருத்துவமனையில் உள்ள குருதி மையம், பிறப்பு-இறப்பு சான்றிதழ் வழங்கும் இடம், புறக்காவல் மையம், புறநோயாளிகள் பதிவு செய்யும் இடம், புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு தேவைப்படும் கிசிச்சையினை தாமதமின்றி உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார். ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவ கட்டிடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, தென்கரை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மனுக்கள் பதிவேடு, ஆக்கிரமிப்புகள் குறித்த பதிவேடு, இருப்பிடச் சான்றிதழ் பதிவேடு, வருமான சான்றிதழ் பதிவேடு, பி-மெமோ பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளையும், அலுவலகத்தின் தூய்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.பெரியகுளம் கிளை சிறைச்சாலையில் உணவுப்பொருள் வழங்கல் பதிவேடு, பார்வையாளர் பதிவேடு, உள்வரும் மற்றும் வெளிசெல்லும் நபர்கள் குறித்த பதிவேடு, கைதிகளின் அறை ஒதுக்கீடு பதிவேடு, காவலர் பணி ஒதுக்கீடு பதிவேடு, உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு, சிறைவாசிகள் படிப்பதற்கு புத்தகங்களை தானமாக வழங்கினார்.
இலட்சுமிபுரம் கண்மாயில், வெங்காய தாமரை படர்ந்து, நீர் மாசடைந்து துர்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தி அதிகமானதை தொடர்ந்து, தனியார் பங்களிப்புடன் கண்மாயில் படர்ந்திருந்த வெங்காய தாமரை முழுவதுமாக அகற்றி, தூர்வாருவதற்காக திட்டமிடப்பட்டு தற்பொழுது முதற்கட்டமாக கனரக மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். இலட்சுமிபுரம் ஊராட்சிமன்ற அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் தீர்மானங்களின் நிலுவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து அகற்றுதல், குடிநீர் தொட்டிகளை தூய்மைப்படுத்துதல், குளோரின் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.