போலி நிருபர்களுக்கு தேனி கலெக்டர் எச்சரிக்கை; புகார் அளிக்க எண்கள் வெளியீடு
செய்தியாளர்கள் என்ற பெயரில் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – போலி நிருபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை.
தேனி மாவட்டத்தில் பத்திரிகையாளர் என்ற பெயரில் போலி பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் மற்றும் குவாரி உரிமையாளர்கள் ஆகியோர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல்படுவதாக தொடர்ந்து புகார் மனுக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வண்ணம் இருக்கிறது.
’தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக இருக்க கூடாது’ - அன்புமணி ராமதாஸ் பேட்டி
தேனி மாவட்டத்தில் மாவட்ட அளவில் மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் தவிர எங்கு பார்த்தாலும் பத்திரிக்கையாளர் என தங்களை தாங்களே அறிமுகப்படுத்திக் கொண்டு, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் அலுவலர்களை ணி செய்ய விடாமல் இடையூறு செய்வதாகவும், பல்வேறு கசப்பான சம்பவங்களில் ஈடுபடுவதாக புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
மேலும், தங்களுக்கு உயர் அதிகாரிகளை தெரியும் எனவும், கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிப்பதாக தெரிய வருகிறது. அங்கீகரிக்கப்படாத போலி நிருபர்கள் வாட்ஸ்அப் செயலி மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகளை வெளியிடுவேன் என அரசு அலுவலர்களையும், தனியார் அமைப்பு பிரதிநிதிகளை மிரட்டி பணம் பறிப்பதாக தெரிய வருகிறது.
எனவே, பத்திரிகையாளர் என்ற பெயரில் போலியான அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு மோசடி செயல்களில் ஈடுபடும் போலி செய்தியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பத்திரிகையாளர் என்ற பெயரில் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத PRESS ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு, போலியான அடையாள அட்டை வைத்துக் கொண்டுள்ளோர் மீதும் காவல்துறையின் மூலம் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், பத்திரிகையாளர் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், வியாபாரிகள், அரசு அலுவலர்கள் உரிய ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் தெரிவித்தால் அந்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Watch Video:ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன்.. தேர்தல் பிரச்சாரத்தில் நிலைகுலைந்த முதல்வர் மகள்!
எனவே, பொதுமக்கள், வியாபாரிகள், வணிக நிறுவன பிரநிதிகள், அரசு அலுவலர்கள் போலி நிருபர்களை கண்டு அச்சம் கொள்ளாமல் மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து தகுந்த ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம். மேலும், மாவட்ட ஆட்சியரக அலுவலக தொலைப்பேசி எண்.94980 42443, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைப்பேசி எண்.94981 01570 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவர்களின் தகவல்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுகிறது.