’தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக இருக்க கூடாது’ - அன்புமணி ராமதாஸ் பேட்டி
”ஒரு கட்சியின் கொள்கையை ஆளுநர் கடைபிடிக்கவோ, பேசவோ கூடாது. தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக இருக்க கூடாது. ஆளுநர் நடுநிலையாக செயல்படவில்லை. ஆளுநர் அரசியல்வாதி கிடையாது”
கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை மாநகரில் சரியான முறையில் குடிநீர் வழங்கவில்லை. 10-15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுகிறது. தூய்மையான குடிநீர் வழங்கவில்லை. கோவையில் தரமற்ற முறையில் சாலைகள் போட்டதால் அனைத்து சாலைகளும் சரியில்லாமல் உள்ளது. கோவையில் இருந்து மக்கள் வெளியேறும் சூழல் உள்ளது. கோவை மீது முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தடாகம் பகுதியில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்பு தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளை அரசு தக்க வைக்க வேண்டும்.
கோவையில் 50 விழுக்காடு குறுந்தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளது. தொழில் கூடங்களுக்கு ஓராண்டில் இரண்டு முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட மின்கட்டணம், நிலைக்கட்டணம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும். அப்படி செய்தால் தான் தொழில் நடத்த முடியும். அதை விட்டு எத்தனை முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினாலும் 1 டிரில்லியன் பொருளாதரத்தை தமிழ்நாடு அடைய முடியாது.
ஆளுநர், முதலமைச்சர் இருவரும் சேர்ந்து செயல்பட வேண்டும். இருவரும் இரண்டு பக்கம் சென்றால் பாதகம் தமிழக மக்களுக்கு தான். ஆளுநர் நடுநிலையாக செயல்பட வேண்டும். மக்கள் நலன் கருதி ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்களை திருப்பி அனுப்ப ஆளுநர் தாமதப்படுத்த கூடாது. ஆளுநர், முதலமைச்சர் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.
செய்யூரில் சிப்காட் அமைக்க விளை நிலங்கள் எடுக்காமல், தரிசு நிலத்தில் சிப்காட் அமைக்க வேண்டும். சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை எடுப்பது தவறான முன்னுதாரணம் அமையும். தமிழ்நாடு முழுவதும் தொழிற்சாலைகள் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதனை இந்த கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். சமூக நீதி பேசும் திமுகவிற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த என்ன தயக்கம்? சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காமல் சமூக நீதி பேச உங்களுக்கு தகுதி கிடையாது. கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.தமிழ்நாட்டில் உள்ள 540 சாதிகளும் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய வேண்டும். அதில் பின்தங்கிய சமுதாயங்களை முன்னேற்ற சிறப்பு திட்டங்கள் கொண்டு வர வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்கவும், போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம்.
ஆளுநர் கட்சி சார்ந்தவராக இருக்க கூடாது. ஒரு கட்சியின் கொள்கையை ஆளுநர் கடைபிடிக்கவோ, பேசவோ கூடாது. தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக இருக்க கூடாது. ஆளுநர் நடுநிலையாக செயல்படவில்லை. ஆளுநர் அரசியல்வாதி கிடையாது. ஆளுநர் அரசியல் பேசினால் தமிழக மக்களுக்கு பாதகம். இந்தியாவில் 10 இலட்சம் மருத்துவர்கள் தேவை. 20 இலட்சம் செவிலியர்கள் தேவை. இந்த நிலையில் மருத்துவ தேவை என்பதை மக்கள் தொகை அடிப்படையில் எடுக்க கூடாது. அப்படி செய்தால் மருத்துவ கல்லூரிகள் குறைய வாய்ப்புள்ளது. இதனை கைவிட வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். மருத்துவர் ராமதாஸ் கட்சி துவங்கும் முன்பிருந்தே மதுவை ஒழிக்க போராட்டம் நடத்தி வருகிறார். மது விலக்கை எல்லா கட்சிகளும் கொள்கை ரீதியாக ஏற்கும் நிலைக்கு வர பாமகதான் காரணம். தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது மதுக்கடைகளை மூட வேண்டும். மதுக்கடைகளை மூடும் எண்ணம் தமிழக அரசிற்கு துளியும் கிடையாது. மதுக்கடைகளை மூடினால் சாலை விபத்துகளை குறைக்க முடியும். 2024 நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு விரைவில் அறிவிப்போம்” எனத் தெரிவித்தார்.