TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விஜய் போட்டியிட்டால் அவருக்காக அ.தி.மு.க. போட்டியிடாமல் ஒதுங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து 3வது முறையாக தேர்தலை சந்திக்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி. 2021 சட்டப்பேரவை தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஈவேரா திருமகன் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அவர் உயிரிழந்த பிறகு நடந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி MLA ஆனார். தற்போது அவரது மறைவை தொடர்ந்து மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி.
2026 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து அரசியலில் entry கொடுத்துள்ள விஜய் இந்த இடைத்தேர்தலில் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கான ட்ரைலராக திமுகவுக்கு எதிராக இடைத்தேர்தலில் போட்டி போடலாமா என விஜய் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
மற்றொரு பக்கம் அதிமுகவின் திட்டம் என்ன என்பதை சுற்றி கேள்விகள் வலம் வருகின்றன. ஏற்கனவே விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டி போடவில்லை என பின்வாங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ். திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் தேர்தல் நியாயமாக நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். அதனால் இந்த முறையும் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேபோல் விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ள அதிமுக, அதனை கணக்கு போட்டும் தேர்தலை புறக்கணிக்க வாய்ப்பிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. விஜய்யின் தவெக இடைத்தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் தேர்தல் களம் திமுக vs தவெக என மாறும் என்பதை கணக்கிட்டே அதிமுக காய்களை நகர்த்தவிருப்பதாகவும் சொல்கின்றனர். ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை போலவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் விஜய் புறக்கணிப்பாரா அல்லது திமுகவுக்கு எதிரான போட்டியாக களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.