தேனி: பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுமி - பெற்றோருக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி
சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரம் பேரூராட்சியில் பூங்கா அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பூங்காவுக்கு குழி தோண்டிய நிலையில் பணிகள் முடங்கிக் கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த குழியில் தேங்கிய மழைநீரில், கடந்த 6-ந்தேதி கடமலைக்குண்டு அருகே மூலக்கடையை சேர்ந்த முத்து சரவணன் மகள் ஹாசினி ராணி (வயது 8) தவறி விழுந்து உயிரிழந்தார். சிறுமி தவறி விழுந்து உயிரிழந்ததாக ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி: சின்னமனூர் அருகே பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு
பூங்கா அமைக்கும் பணியில் ஏற்பட்ட அலட்சியத்தால் சிறுமி உயிரிழந்ததாகவும், இதற்கு நீதி விசாரணை நடத்தி அலட்சியத்துக்கு காரணமான ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில், சிறுமியின் சாவுக்கு நீதி கேட்டு மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று மாவட்டம் முழுவதும் சலூன் கடைகளை அடைத்துவிட்டு முடிதிருத்தும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்து இருந்தனர். இதையடுத்து சங்க நிர்வாகிகளிடம் நேற்று இரவு வரை வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சிறுமியின் பெற்றோருக்கு தேனி மாவட்ட ஆட்சியர் பொது நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
"ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பில் இருக்கக்கூடாதா? ஏன்? அதென்ன தடை செய்யப்பட்ட அமைப்பா?” : கொதித்த ஆளுநர்..
அதன்படி, இந்த பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்தப் பணியை எடுத்து இருந்த கம்பத்தை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பாலமுருகன், பொறியாளர் வேம்புபிரபு, மேற்பார்வை பொறியாளர் ராகுல்நேரு ஆகிய 3 பேர் மீதும் ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்குப்பதிவு விவரங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து முடிதிருத்தும் தொழிலாளர்களின் கடையடைப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் நிர்வாகிகள் முன்னிலையில், சிறுமியின் பெற்றோரிடம் ரூ.1 லட்சத்துக்கான நிவாரண உதவிக்கான காசோலையை ஆட்சியர் முரளிதரன் வழங்கினார். மேலும், நிவாரண உதவிக்கு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

