தேனி : கோவில் திருவிழாவில் ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் அடித்துக்கொண்ட விநோத நிகழ்வு..
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் உறவுகள் துளிர்விட துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் நூதன நிகழ்ச்சி நடந்தது.
வருடந்தோறும் சித்திரை மாதங்களில் அதிக அளவில் உள்ளூர் கோவில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அப்படி கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸின் கொடூர தாண்டவத்தின் காரணமாக வழிபாட்டுத்தலங்களில் கோவில் திருவிழாக்கள் நடப்பது என அனைத்தும் தடை செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இரண்டு வருடத்திற்கு பிறகு தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள் ,உள்ளூர் நிகழ்ச்சிகள் என அனைத்தும் நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மறவப்பட்டி எனும் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் இந்த வருடம் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில் மூன்று நாட்கள் திருவிழா என வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் கடந்த 2-ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி மொத்தம் மூன்று நாட்கள் திருவிழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் பொதுமக்கள் அக்னி சட்டி, முளைப்பாரி , பொங்கல் வழிபாடு நடத்தப்பட்டது. விழாவின் மூன்றாவது நாளான நேற்று கிராம மக்கள் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடந்தது. அதில் துடைப்பத்தை கொண்டு, அடிப்பதற்கு முன்பாக துடைப்பத்தை கழிவு நீரிலும் தரையிலும் நனைத்துக்கொண்டு உறவினர்கள் மாமன், மைத்துனர்கள் மீது ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டனர்.
மேலும் சிலர் சகதியிலும் படுத்துக்கொண்டு தங்கள் உறவினர்களிடம் துடைப்பத்தால் அடி வாங்கிய காட்சி அப்பகுதியில் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை சுற்றுவட்டார கிராமங்களில் மக்கள் சேர்ந்து திரளானோர் கண்டுகளித்தனர். துடைப்பத்தை கழிவுநீரில் நனைத்து கொள்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும் என்பதும் நீண்ட நாள் பிரிந்து வாழும் உறவுகள் திருவிழாவின்போது துடைப்பத்தால் அடித்து கொள்வதால் அவர்களுக்கிடையே மீண்டும் உறவு துளிர்த்துவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இவ்வாறு ஒருவரைக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் நூதன முறையில் வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.
தேனி : வெகு விமரிசையாக நடைபெறும் கம்பம் கெளமாரியம்மன் கோவில் திருவிழா..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்