(Source: ECI/ABP News/ABP Majha)
தேனி: அரசு நிலத்தை பட்டா மாற்றி கேரள மாநிலத்தவருக்கு விற்ற அதிமுக பிரமுகர்
’’கேரளாவை சேர்ந்த 5 பேருக்கு பட்டா வழங்கி தனியார் சோலார் மின் பவர் பிளான்ட் போட ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பது விசாரணை மூலம் அம்பலம்’’
தேனி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு நிலங்களை பெரியகுளம் பகுதியில் உள்ள அதிமுக பிரமுகர் அன்ன பிரகாஷ் என்பவர் வருவாய் துறை அரசு அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து தங்களது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ததோடு கனிம வளங்களையும் கொள்ளையடித்ததாக எழுந்த புகாரை அடுத்து அதன் உண்மைத் தன்மையும் நிரூபிக்கப்பட்ட நிலையில், சுமார் 40 ஏக்கருக்கும் மேலான அரசு நிலங்கள் மீட்கப்பட்டு தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் முயற்சியால் மீண்டும் அரசுடமையாக்கப்பட்டது.
இந்த சம்பவங்கள் நடந்த காலத்தில் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த ரமேஷ் தற்போதும் அதே பதவியில் இருப்பதால் மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முடியாமல் அரசு அதிகாரிகள் தற்போது திணறி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தற்போது பெரியகுளம் வட்டம் ஜெயமங்கலம் கிராமத்திலும், மேல்மங்கலம் கிராமத்திலும் 56 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் மோசடியாக முறைகேடாக மாற்றப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 56 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் அனைத்தும் வைகை அணைக்கு சொந்தமான நிலங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலம் கேரளாவைச் சேர்ந்த சங்கரன் குட்டி அவரது மகன் சுதாகரன் மனைவி கோமளவல்லி அவரது மகன் கிரிஷ்,கிருஷ்ணா, நரேஷ் குரூஸ் ஆகிய 5 பேருக்கு பட்டா வழங்கி இருப்பதும் அந்த இடத்தில் தனியார் சோலார் மின் பவர் பிளான்ட் போட ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாக தற்போது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது. அதேபோல் 10 ஏக்கர் வரை தனியார் சோலார் பவர் நிறுவனத்திற்கும் அரசு நிலங்களை பட்டா மாறுதல் செய்து கொடுத்தும் இருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இவ்வளவு பெரிய தவறுகள் நடந்த நிலையில் அரசு அதிகாரிகள் தாசில்தார் அளவில் மட்டும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 தாசில்தார்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலங்கள் முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தில் ரிஜிஸ்டரை பராமரிக்கும் சப்-கலெக்டர் ஆனந்தி ஜெயப்பிரதா ஆகியோரிடம் விசாரணை கூட நடத்தப்படாமல் இருப்பதும் மேலும் இந்த பட்டா மாறுதல் அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த பல்லவி பல்தேவ் போன்றவர்களுக்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. தேனி மாவட்டத்தில் இந்த நிலங்கள் முறைகேடு நடந்த ஆண்டில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளையும் மாற்றம் செய்து சிபிஐ அல்லது நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் பெரியகுளம், தாமரை குளம் பகுதியில் புறம்போக்கு நிலத்தை தனது மனைவி பெயரில் பட்டா மாற்றம் செய்த சர்வேயர் சக்திவேல் தாசில்தார் கிருஷ்ணகுமார் பேரூராட்சி பகுதியில் 50 ஏக்கர் நிலத்தை 42 பேருக்கு பட்டா வழங்கியதாக சர்வேயர் பிச்சைமணி உட்பட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அரசு நிலத்தை பட்டாவாகவும் கூட்டுபட்டாவாகவும் மாற்றிய 69 பேர் மீதும் அரசு அதிகாரிகள் மீது கிரிமினல் சட்ட நடவடிக்கை எடுக்க சப்-கலெக்டர் ரிசப் தேனி எஸ்பி பிரவீன் உமேஸ் டோங்கரேவிடம் புகார் அளித்துள்ளனர். புகார் மனு மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட எஸ்பி பரிந்துரைத்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கூறியதாவது: கொங்குவார்பட்டி, தாமரைக்குளம், வடவீரநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஏற்கனவே கண்டுபிடித்த அரசு நிலத்தை மீண்டும் புறம்போக்கு நிலமாக மாற்றியுள்ளோம். தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம் அதிமுக பிரமுகர் அன்ன பிரகாஷ் முறைகேடு செய்ததற்கு கனிமவளத் துறை மூலம் 14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு 4 லட்சம் ரூபாய் கட்டி உள்ளார், எனவும் மீதி தொகையை வசூலிக்க நோட்டீஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். செயற்கைக்கோள் மூலம் பட்டா மாறுதல் கனிமவளக் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய உள்ளோம் முறைகேடுகளில் ஈடுபட்ட அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்க காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.