அரசு நிலத்தை அபேஸ் செய்து மலையை விழுங்கிய அதிமுக பிரமுகர் - குற்றவியல் நடவடிக்கை கோரி புகார் மனு
’’ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியில் மலைக்குன்று இருந்ததும் அது தற்போது முழுமையாக சுரண்டப்பட்டதும் தெரியவந்துள்ளது’’
தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் சுமார் 100 ஏக்கருக்கும் மேலான அரசு நிலங்கள் உள்ளன. இவற்றை கடந்த அதிமுக ஆட்சியில் அரசு அதிகாரிகளின் உதவியுடன் பெரியகுளம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அன்னபிரகாஷ் தனது பெயரிலும் அவரது உறவினர்கள் பெயரிலும் முறைகேடாக அரசு நிலத்தை கையகப்படுத்தி போலியான பட்டா மாறுதல் செய்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்டா மாறுதல் செய்த இடங்களில் கனிமவளத் துறை அதிகாரிகளின் ஆதரவோடு அதிமுக நிர்வாகி அன்னபிரகாஷ் பல்லாயிரம் யூனிட் மண்ணையும் தோண்டி எடுத்து விற்பனை செய்துள்ளார். அந்த பகுதியில் ஒரு மலைக்குன்று இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது ஆனால் தற்போது மலை குன்று இருப்பதற்கான அடையாளம் ஏதும் இல்லாத அளவிற்கு அனைத்தும் சுரண்டப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த ஆவணம் தொடர்பான இணையதளத்தில் குறிப்பிட்ட சர்வே எண்கள் விபரம் மறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறைகேடுகளுக்கு துணையாக கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், நில அளவையாளர்கள் இருந்துள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ள நிலையில், இது குறித்த தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் விசாரணை நடத்தி முதற்கட்டமாக சில தினங்களுக்கு முன்பு பெரியகுளம் தாசில்தார் கிருஷ்ணகுமார் உள்பட 4 தாசில்தார்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த முறைகேடாக பதிவு செய்யப்பட்ட 100 ஏக்கர் நிலத்தில் 90 ஏக்கர் மாவட்ட நிர்வாகம் தற்போது கையகப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மாவட்ட பதிவாளர் உடன் ஆலோசனை நடத்திய தேனி மாவட்ட ஆட்சியர் கையகப்படுத்திய நிலத்தை முறைப்படி அரசு ஆவணங்களில் பதிவேற்றியதாக கூறப்படுகிறது. முறைகேடாக பட்டா மாற்றி நிலத்தை அபகரித்தவர்கள் சிலருக்கு விலைக்கு பத்திரப் பதிவும் செய்துள்ளனர். எனவே இந்த நிலம் தொடர்பான பத்திர பதவிகளை ரத்து செய்ய சார் பதிவாளருக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அபகரிக்கப்பட்ட நிலத்தின் வரைபடங்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு செயற்கைக்கோள் புகைப்படத்துடன் ஒப்பீடு செய்து நிலம் மீண்டும் அரசுடமையாக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார். முறைகேடாக பட்டா போட்டு கொடுத்தவர்கள் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் இதற்காக பெரியகுளம் சப்-கலெக்டர் மூலமாக போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட வருவாய் துறை அதிகாரிகள் குழுவினர் இணைந்து பெரியகுளம் பகுதியில் மேலும் 50 ஏக்கர் அரசு நிலத்தை 42 பேருக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளதாகவும் புகார் வந்துள்ளது. இது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் அந்த அரசு நிலங்கள் விரைவில் மீட்கப்படும் எனவும் இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் குற்றவியல் நடைமுறை படி தண்டிக்கப்படுவார்கள் எனவும் தேனி மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.
அரசு நிலம் தனியாருக்கு பட்டா தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
தேனியில் 90 ஏக்கர் அரசு நிலத்தை தனிநபரின் பெயரில் பட்டா கொடுத்த 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்