பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும் என லாரி சம்மேளனம் கோரிக்கை !
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் தற்கொலைக்கு தள்ளப்படுவார்கள்" என வேதனை தெரிவித்தார்.
கடந்த ஆண்டை போல் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்ததால் இரண்டாவது அலை வேகமெடுத்து கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர். தற்போது வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர். இந்த கொடிய நேரத்திலும் பெட்ரோல், கேஸ், டீசல் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த காரணத்தால், பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்று காரணம் சொல்லப்பட்டது.
சென்னையில் தேர்தல் முடிவுக்கு முன்பு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது. சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு நாள் விலை உயர்வும், ஒருநாள் மாற்றமின்றியும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் மட்டும் 43 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு இடங்களில் பெட்ரோல் டீசல் விலை மிகப்பெரும் பாதிப்பை உருவாக்கிவருகிறது.
இந்நிலையில் இது குறித்து மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் துணைத்தலைவர் சி.சாத்தையா, "லாரி சர்வீஸ் பணிகளில் சுமார் 65% செலவு டீசலுக்கு போய்விடும். அது போக பேட்டா 15%, லோடிங் கமிஷன் 10% டோல்கேட் அப்படி, இப்படி என பணம் முழுசும் போய்விடும். கடைசியாக கையில் 10% தான் மிஞ்சும். இப்படி இக்கட்டான சூழலில் லாரிகள் பழுது ஏற்பட்டால் கைக்கு நட்டம்தான். மத்திய அரசு டீசல் விலையை உயர்வை கண்டுகொள்ளாமல் வறுமானம் கிடைக்கிறது என்று சந்தோஷமாக உள்ளது. இரயில் போக்குவரத்தை விட தரை வழி போக்குவரத்துதான் அதிகம்.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை கண்டுகொள்ளாமல் இருப்பது ஆபத்து. ஒவ்வொரு டோல்கேட்டுகளும் விலையை அதிகரித்து வருகின்றனர். சென்னை செல்லும் வழியில் மட்டும் 7 டோல்கேட்டுகள் குத்தகை முடிந்தும், செயல்படுகின்றன. அது அரசுக்கு தெரிந்து தான் நடக்கிறதா என்று கூட தெரியவில்லை. இவ்வாறான விசயங்களும் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்களை பாதிக்கும். எனவே மத்திய அரசு பெட்ரோல்,டீசல் விலையில் கவனம் செலுத்தவில்லை என்றால் பல்வேறு தனியார் நிறுவங்களும் ஸ்தம்பித்து போகும். ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் போக்குவரத்துத்துறைதான் பாலமாக இயக்குகிறது. இதனால் அரசுகள் இதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். மாநில அரசோ ’இது மத்திய அரசின் திட்டம்’ என்பது போல் உதிர்க்காமல். மாநில அரசும் நிலை உணர்ந்து செயல்படவேண்டும். இல்லை என்றால் கொரோனாவின் கொடுமையான சமயத்தில் பெட்ரோல், டீசல் விலை லாரி உரிமையாளர்களையும், ஓட்டுநர்களையும் தற்கொலைக்கு தூண்டும்" என வேதனை தெரிவித்தார்.
இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் ‛அனுமதியிருந்தும் கடலுக்கு போக முடியல...’ கலங்கும் மீனவர்கள்!