DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று விசிக திமுக-விற்கு அழுத்தம் தர திட்டமிட்டுள்ளனர்.

2026ம் ஆண்டு பிறந்தது முதலே தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் ஆட்சியை கைப்பற்ற வியூகம் வகுத்து வரும் நிலையில், திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள கட்சிகள் தங்களுக்கான தொகுதிப் பங்கீடு, போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் தயாரிப்பு பணிகளில் தீவிரமாக உள்ளது.
திமுக கூட்டணி:
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வரும் தேர்தலில் மிகவும் வலுவான கூட்டணி வைத்துள்ள கட்சியாக திமுக உள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, மக்கள் நீதிமய்யம் என மிகவும் வலுவான கூட்டணியை திமுக வைத்துள்ளது.
234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையை பெரும் நோக்கத்தில் திமுக சுமார் 180 தொகுதிகளுக்கும் மேல் போட்டியிட திட்டமிட்டுள்ளது. அதிமுக-வுடன் இணைந்து தவெக-வும் இந்த முறை போட்டியில் குதித்துள்ளதால் கூட்டணி கட்சிகள் தங்கள் தொகுதிப் பங்கீடு நிபந்தனையை அதிகரித்துள்ளனர்.
இரட்டை இலக்கத்தில் தொகுதி:
காங்கிரஸ் கட்சியின் பலரும் விஜய்யின் தவெக-விற்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், விசிக-வும் ஒரு பக்கம் அழுத்தம் தர தயாராகி வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளை திமுக-விடம் பெற்ற விசிக, இந்த முறை தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று திமுக-விற்கு நிபந்தனை விதித்துள்ளனர்.
விசிக இளைஞரணிச் செயலாளர் சங்கத்தமிழன் தனியார் வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, கடந்த தேர்தலில் 6 தொகுதிகள் அளித்ததே நியாயமற்ற பங்கீடு. வரும் தேர்தலில் 25 தொகுதிகள் வரை கேட்போம் என்று தெரிவித்துள்ளார்.
கூட்டணியை பாதிக்குமா?
விஜய் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கியவுடன் அவர் கூட்டணிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தது முதன்முதலில் விசிக-விற்கே ஆகும். மேலும், பாமக-விற்குள் தந்தை - மகனுக்கு இடையே மோதல் உருவாகியுள்ள நிலையில், ராமதாஸ் திமுக கூட்டணிக்கு வர தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.
தவெக-வில் இருந்தும், அதிமுக-வில் இருந்தும் தொடர்ந்து அழைப்புகள் குவிந்து வரும் நிலையில் விசிக தங்களுக்கான தொகுதியை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து நிபந்தனை விதித்து வருகிறது. இந்த தொகுதி பங்கீடு விவகாரம் கூட்டணியில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மேலும், கூட்டணிக்குள் பாமக வந்தால் கண்டிப்பாக கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று தொடர்ந்து திருமாவளவன் கூறி வருகிறார். திமுக ஆட்சியில் பட்டியலின சமுதாயத்தினர் மீது ஆங்காங்கே அரங்கேறிய வன்முறை சம்பவங்களும் சில இடங்களில் திமுக மீது அதிருப்தியாக உள்ள நிலையில், பட்டியலின சமுதாய மக்களின் ஆதரவை பெருவாரியாக வைத்துள்ள விசிக தங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்றே திமுக விரும்புகிறது.





















