கோலாகலமாக நடந்த கொடைக்கானல் மலர் கண்காட்சி.. எத்தனை பேர் கலந்துக்கிட்டாங்க தெரியுமா?
கொடைக்கானலில் நடைபெற்ற 59-வது மலர் கண்காட்சி 6 நாட்கள் நடைபெற்ற நிலையில் சுற்றுலா பயணிகள் சுமார் 57 ஆயிரம் பேர் கலந்துகொண்டதாக தெரிகிறது
சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் குளு, குளு சீசனையொட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 24-ஆம் தேதி பிரையண்ட் பூங்காவில் வெகுவிமரிசையாக தொடங்கியது. இந்த கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களாலான திருவள்ளுவர் சிலை, மயில் உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. முதன்முறையாக 6 நாட்கள் நடைபெற்ற இந்த மலர் கண்காட்சியை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
சாரல் மழை இதனிடையே நேற்று அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். இதன் காரணமாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனிடையே நேற்று காலை சுமார் 11 மணிமுதல் மாலை வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக அடிக்கடி மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இணையதள சேவைகளும் பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா இடங்களை கண்டு களித்தனர். நேற்று மாலையில் கொடைக்கானலில் இருந்து திரும்பிய சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைத் துறையின் சீரமைப்பு பணிகள் காரணமாக நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன.
#கொடைக்கானல் 6 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியில் 17 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது! pic.twitter.com/E1v5dt0xPm
— Nagaraj (@CenalTamil) May 30, 2022
ரூ.17 லட்சம் மலர் கண்காட்சி குறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் பாண்டியராஜன், பூங்கா மேலாளர் சிவபாலன் ஆகியோர் கூறுகையில், மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன்காரணமாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கடந்த 6 நாட்களில் சுமார் 56 ஆயிரத்து 785 பேர் மலர் கண்காட்சியை கண்டு ரசித்துள்ளனர். இதன் மூலம் பூங்கா நிர்வாகத்திற்கு சுமார் ரூ.17 லட்சம் வருவாய் கிடைத்ததுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்