Keezhadi Excavation : கீழடி அகழாய்வில் தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கண்டெடுப்பு.. விவரம்..
கீழடியில் தந்தத்தினாலான ஆட்டக்காய் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. உருளைவடிவிலான உடற்பகுதியை உடைய இந்த ஆட்டக்காய் சற்று அரைக்கோளவடிவ தலைப்பகுதியையும் தட்டையான அடிப்பகுதியையும் கொண்டுள்ளது.
தமிழர் வரலாறு தமிழ்நாடு 15 இலட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்றுத் தொன்மை கொண்ட நிலப்பரப்பாகும். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. கீழடி அகழாய்வு, தொல்லியலாளர்கள் இடையே மட்டுமின்றி உலகத் தமிழர்கள் இடையேயும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்ச் சமூகமானது, கி.மு. 6-ம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கரிமப் பகுப்பாய்வுகளின் முடிவுகள் வாயிலாக உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் ஏற்கெனவே கண்ணாடி பாசி மணிகள், தா எனும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. மேலும் மீன் உருவிலான சிவப்பு வண்ண பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.