Chennai Encounter: சென்னையில் பரபரப்பு - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - போலீசாரின் என்கவுண்டரில் ரவுடி திருவேங்கடம் சுட்டுக்கொலை
Chennai Encounter: சென்னையில் ரவுடி ஒருவர் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Encounter: சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் ஒருவர், போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்கவுன்டரில் ரவுடி சுட்டுக்கொலை:
ரெட்டேரி ஆட்டுச்சந்தை பகுதியில் போலீசார தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திருவேங்கடம் என்பவர் உயிரிழந்தார். மாதாவரம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ய, போலீசார் அழைத்துச் சென்றபோது அவர் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதியில் சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், 8 பேர் போலீசில் சரணடைந்தனர். விசாரணைக்குப் பிறகு மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து 11 பேரும் போலீசாரின் விசாரணைக் காவலில் எடுக்கப்பட்டு இருந்த நிலையில், திருவேங்கடம் என்பவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளளார்.
தொடரும் என்கவுன்டர்கள்:
திருச்சி உறையூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் துரை. புதுக்கோட்டை - திருச்சி மெயின் ரோடு அருகே வம்பன் தைலமர காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த அவரை பிடிக்க முயன்றபோது, நடந்த தாக்குதலில் போலீசாரால் என்கவுன்டரில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் அந்த சம்பவம் நடந்த மூன்று நாட்கள் இடைவெளியிலேயே , ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஒருவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார். ஒரே வாரத்தில் நடந்துள்ள இரண்டு என்கவுன்டர்கள் ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட-ஒழுங்கை நிலைநாட்ட என்கவுன்டரா?
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது, தலைநகர் சென்னையிலேயே தேசிய கட்சியின் மாநில தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் மொத்த மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. இதனால், மாநிலத்தில் சட்ட-ஒழுங்கு என்பதே இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்க தொடங்கின. இதையடுத்து, தமிழ்நாடு அரசு நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை முன்னெடுத்தது. முதலமைச்சர் ஸ்டாலினும் சட்ட-ஒழுங்கு தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனிடையே, சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக, அந்த பதவியில் அருண் நியமிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தவர், ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்நிலையில் தான் என்கவுன்டரில் அடுத்தடுத்து இரண்டு ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

