மேலும் அறிய
Advertisement
சிவகங்கை பெருங்கற்கால கல்வட்டம் சிறப்பு தெரியுமா ?
ஒக்கூரை அடுத்த அண்ணாநகர் பகுதியில் முதன்மைச்சாலையின் கிழக்குப் பக்கத்தில் கிழக்கு மேற்காக ஓடும் ஓடையை ஒட்டிய பகுதியில் கல் வட்டங்கள் காணக்கிடைக்கின்றன.
சிவகங்கையை அடுத்த ஒக்கூர் அண்ணாநகர் பகுதியில் 2500 முதல் 3500 ஆண்டுகள் பழமையான சங்க காலத்தோடு தொடர்புடைய கல் வட்டங்கள் உள்ளன. இந்த கல்வட்டங்களை தொல்லியல் ஆர்வலர்கள், ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். இது குறித்து இந்த கல்வட்டத்தை கண்டறிந்த சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர். புலவர் கா. காளிராசா கூறுகையில்..., சிவகங்கை மாவட்டத்தில் பெருங்கற்கால ஈமக்காடு பரவலாக காணக்கிடைக்கிறது.. அதில் முதன்மையான நெடுஞ்சாலையை ஒட்டிக் காணக்கிடைப்பது நாட்டரசன்கோட்டை அடுத்த சாத்தனி விலக்கப் பகுதியில் உள்ள புத்தேனந்தல் கண்மாய்ப் பகுதியும் ஒக்கூர் பகுதியும் எனலாம்.
"சங்க காலத்தோடு தொடர்புடைய ஊராக ஒக்கூர் அறியப்பட்டுள்ளது. ஒக்கூர் மாசாத்தியார் பாடல்கள் அகநானூறு குறுந்தொகை புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. இதில் புறநானூற்றுப் பாடல் மிகுந்த சிறப்புடையதாக போற்றப்படுகிறது. 'மூதின் முல்லைத் துறையில் கெடுக சிந்தை' எனத்தொடங்கும் அப்பாடல் மறக்குடி பெண்ணொருத்தி முதல் நாள் போரில் தந்தை இறந்தும் இரண்டாம் நாள் போரில் கணவன் இறந்தும் தம் குடிப் பெருமையை நிலைநாட்ட மூன்றாம் நாள் போருக்கு தெருவில் விளையாடித் திரிந்த தன் மகனை அழைத்து சீவி முடித்து சிங்காரித்து இரத்த காவி படிந்த வாளைக் கொடுத்து அனுப்பி வைத்ததாக பாடப்பெற்றுள்ளது. இவ்வளவு சிறப்பு பொருந்திய புலவர் மாசாத்தியார் வாழ்விடமாக ஒக்கூர் விளங்கியிருக்கிறது. அவர் காலத்து ஈமக் காடாக இந்த கல் வட்டங்கள் இருந்திருக்கலாம்” என்றார்.
கல்வட்டம்
பெருங்கற்காலத்தில் இறந்த மனிதனை புதைத்து சடங்குகள் முடித்து வழிபட்டு வந்தனர், இறந்த உடலை அல்லது எலும்புகளை பாதுகாக்க புதைத்து அதைச்சுற்றி பெரும் கற்களை அடுக்கி வைத்துள்ளனர். இவ்வாறான கல்வட்டங்கள் பல பகுதிகளில் காணக்கிடைக்கின்றன. கல்திட்டை, கல்பதுக்கை, குடைக்கல், குத்துக்கல் அல்லது நெடுங்கல் போன்றவை பெருங்கற்கால அமைப்பு முறைகளாகும். கல் வட்டங்கள் கற்பதுக்கைகள் தொடர்பான செய்திகள் சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.
அண்ணாநகர் பகுதியில் கல்வட்டம் கற்பதுக்கை
ஒக்கூரை அடுத்த அண்ணாநகர் பகுதியில் முதன்மைச்சாலையின் கிழக்குப் பக்கத்தில் கிழக்கு மேற்காக ஓடும் ஓடையை ஒட்டிய பகுதியில் கல் வட்டங்கள் காணக்கிடைக்கின்றன. மலைப் பகுதியில் வெள்ளைக்கல்லாலும் மற்ற செம்மண் பகுதிகளில் அங்கு கிடைக்கும் செம்பூரான் கற்களாலும் கல் வட்டங்கள் அமைக்கப் பெறும் இவ்விடத்தில் இரண்டு கற்களும் கலந்து காணக்கிடைப்பது வியப்பாக உள்ளது. குத்துக்கல் ஒன்று அப்புறப்படுத்தப்பட்டு கிடைமட்டமாக கிடக்கிறது.
கற்பதுக்கை
பலகைக் கற்களை நான்கு பகுதிகளிலும் குத்தாக்க நிறுத்திவைத்து அறை போல வடிவமைத்து அதில் உடலை அல்லது எலும்புகளை வைக்கும் முறை கற்பதுக்கை என வழங்கப்படுகிறது. இந்த ஈமக்காட்டுப்பகுதியில் கற்பதுக்கை ஒன்றும் காணக்கிடைக்கிறது.
தாழி எச்சங்கள்
கல் வட்டங்களின் உள்பகுதியிலும் பின்னாளில் தனித்தும் தாழிகளில் இறந்த உடலை அல்லது எலும்புகளை வைத்து அடக்கம் செய்து வழிபடும் முறை இருந்தது, இப்பகுதியில் சிதைந்த தாழி ஓடுகள் மேற்பரப்பு ஆய்வில் காணக்கிடைக்கின்றன.
மூத்தோர் வழிபாடு
கல்வட்டம் கற்பதுக்கை தாழிகள் உள்ள ஈமக் காடுகளில் மூத்தோர் வழிபட்ட இடத்தில் தொடர்ந்து வழிபடும் முறை இன்றும் மக்களிடையே இருந்து வருகிறது. இங்கும் இன்றும் வழிபாடு நீடித்து வருவதை காணமுடிகிறது. இப்பகுதிக்கு எதிரே உள்ள பகுதியிலும் ஒரு கல் மேலச்சாலூரைச் சேர்ந்த மக்களால் தொன்றுதொட்டு வழிபடப்பட்டு வருகிறது.
பெருஞ் சிதைவுக்குள்ளான ஈமக்காடு
தற்போது இந்த கல் வட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்து கல்வட்டங்கள் இருந்ததற்கான எச்சமாகவே வெளிப்படுகின்றன. சங்ககாலப் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் கால ஈமக்காடு அறியப்பட்டதில் சிவகங்கை தொல் நடைக்குழு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது, மேலும் பார்வையிட விரும்புபவர்களுக்கு தொல்நடைக்குழு செயலர் ஆசிரியர் நரசிம்மன் உதவி வருகிறார்.
கீழடி தொடர்பான செய்திகள் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும் ; கீழடி : ஒரே சமதள குழியில் 7 எலும்புக்கூடுகள்.. கொந்தகையில் ஆச்சரியம் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion